2600 புகைப்படங்கள்... ஒரே ஒரு 'சிவப்பு' புள்ளி! - மர்மத்தை உடைத்த AI
AI இத்தாலியில் காணாமல் போன மருத்துவரும் மலையேறுபவருமான நிக்கோலா இவால்டோவை, டிரோன்கள் மற்றும் AI தொழில்நுட்பம் எவ்வாறு கண்டுபிடித்தது? மீட்புப் பணிகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் AI பற்றி முழுமையாக அறிய...

AI
தொழில்நுட்பம் மனித உயிருக்கு ஆபத்தா அல்லது ஆபத்பாண்டவனா என்ற விவாதங்களுக்கு மத்தியில், இத்தாலியில் நடந்த ஒரு சம்பவம் AI-ன் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
இத்தாலியின் பனிபடர்ந்த ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மறைந்திருந்த ஒரு சோகமான உண்மையை, மனிதக் கண்களால் கண்டுபிடிக்க முடியாததை, செயற்கை நுண்ணறிவு (AI) வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. காணாமல் போன ஒரு மருத்துவரைத் தேடும் பணியில் AI ஆற்றிய பங்கு, தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 2024: அந்த மர்மமான ஞாயிற்றுக்கிழமை
அது செப்டம்பர் 2024. இத்தாலியைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும், அனுபவம் வாய்ந்த மலையேறுபவருமான நிக்கோலா இவால்டோ (Nicola Ivaldo), வழக்கம் போல் ஒரு ஞாயிற்றுக்கிழமை மலையேற்றத்திற்காகச் சென்றார். ஆனால், அவர் எங்கு செல்கிறார் என்ற விவரத்தை யாரிடமும் பகிரவில்லை. அதுவே அவர் மேற்கொண்ட கடைசிப் பயணமாக அமைந்தது.
அவரது கார் இத்தாலியின் ஒரு சிறிய கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் கோட்டியன் ஆல்ப்ஸ் (Cottian Alps) மலைச்சிகரங்களில் ஒன்றிற்குச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
தோல்வியில் முடிந்த மனித முயற்சிகள்
நிக்கோலா காணாமல் போனதும், சுமார் 50-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் அந்தப் பகுதி முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர். ஹெலிகாப்டர்கள் மூலமும் வான்வழித் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஒரு வாரம் கடந்தும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதற்கு இடையில், செப்டம்பர் மாத இறுதியில் பனிப்பொழிவு தொடங்கியதால், தேடுதல் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. பனிப்போர்வை அந்த மலையை மட்டுமல்ல, நிக்கோலாவின் மர்மத்தையும் மூடி மறைத்தது.
ஜூலை 2025: மீண்டும் தொடங்கிய தேடுதல் - இம்முறை AI-யுடன்!
சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, ஜூலை 2025-ல் பனி உருகியதும் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கின. இம்முறை மனிதர்களுடன் கைகோர்த்தது அதிநவீன தொழில்நுட்பம். மீட்புக் குழுவினர் டிரோன்கள் (Drones) மற்றும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை (AI Software) களமிறக்கினர்.
டிரோன்கள் மலைப்பகுதியைச் சுற்றிப் பறந்து, மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத இடங்களையும் சேர்த்து சுமார் 2,600 உயர் தெளிவுத்திறன் (High-Resolution) கொண்ட புகைப்படங்களை எடுத்தன. மனிதக் கண்களால் ஆயிரக்கணக்கான படங்களை ஆராய்ந்து பார்ப்பது என்பது நாட்கணக்கில் ஆகக்கூடிய வேலை. ஆனால், இங்குதான் AI தனது மாயாஜாலத்தைக் காட்டியது.
சிவப்பு நிறமும் AI-ன் கண்டுபிடிப்பும்
புகைப்படங்களை ‘பிக்சல்’ வாரியாக (Pixel by pixel) அலசிய AI மென்பொருள், சில மணிநேரங்களிலேயே மலைப்பகுதிக்குச் சம்பந்தமில்லாத வித்தியாசமான பொருட்களை அடையாளப்படுத்தியது. அதில், ஒரு குறிப்பிட்ட படத்தில் தெரிந்த 'சிவப்பு நிறப்பொருள்' ஒன்றை AI சுட்டிக்காட்டியது.
அதுவரை யாருடைய கண்ணிலும் படாத அந்தச் சிறிய சிவப்புப் புள்ளியை ஆய்வு செய்ய மீட்புக் குழுவினர் மீண்டும் டிரோனை அனுப்பினர். அது நிக்கோலாவின் தலைக்கவசம் (Helmet) என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஒற்றைத் தடயத்தை வைத்து, மீட்புக் குழுவினர் விரைவாகச் செயல்பட்டு நிக்கோலா இவால்டோவின் உடலைக் கண்டுபிடித்தனர்.
எதிர்கால மீட்புப் பணிகளில் AI
மீட்புப் பணிகளில் AI பயன்படுத்துவது இது முதல் முறையல்ல என்றாலும், மனிதர்களால் முடியாத ஒரு பணியை இவ்வளவு துல்லியமாக முடித்துக்காட்டியது நம்பிக்கையை விதைத்துள்ளது. "AI தொழில்நுட்பம் சில நேரங்களில் தவறான தகவல்களைத் தரலாம் (Hallucinations) என்றாலும், இதுபோன்ற அவசரகால சூழ்நிலைகளில் அது உயிர்காக்கும் தோழனாக மாறுகிறது" என்கின்றனர் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் மனிதன் சிறியவனாக இருக்கலாம், ஆனால் மனிதன் உருவாக்கிய தொழில்நுட்பம் இயற்கையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வல்லமை கொண்டது என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

