- Home
- டெக்னாலஜி
- மனிதர்களுக்கு பல மாதங்கள்... கிளாட் ஏ.ஐ-க்கு வெறும் 21 மணி நேரம்: மரபணு அறிவியலில் ஆந்த்ரோபிக் நிகழ்த்திய மிரட்டல் சாதனை!
மனிதர்களுக்கு பல மாதங்கள்... கிளாட் ஏ.ஐ-க்கு வெறும் 21 மணி நேரம்: மரபணு அறிவியலில் ஆந்த்ரோபிக் நிகழ்த்திய மிரட்டல் சாதனை!
நவீன மருத்துவத்தையே புரட்டிப்போட்ட 'CRISPR' மரபணு எடிட்டிங் முறைக்கு இணையான புதிய உயிரியல் அமைப்பை (ART) ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 'கிளாட் ஏஐ' தன்னிச்சையாகக் கண்டறிந்துள்ளது.

மரபணு எடிட்டிங் - புதிய உயிரியல் எடிட்டிங் கண்டறிந்தது 'கிளாட் ஏஐ'
பாக்டீரியாக்களைத் தாக்கும் வைரஸ்களுக்குள் முற்றிலும் புதிய உயிரியல் அமைப்பு (Biological System) ஒன்றைத் தனது 'கிளாட் ஏஐ' மாடல்கள் தன்னிச்சையாகக் கண்டறிந்துள்ளதாக முன்னணி ஏ.ஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் அறிவித்துள்ளது. நவீன மருத்துவ உலகையே புரட்டிப்போட்ட 'CRISPR' மரபணு எடிட்டிங் கருவியைப் போன்றே இந்த புதிய அமைப்பும் அச்சு அசலாக ஒத்துப் போவது ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆய்வறிக்கையை செப்.23 அன்று ஆந்த்ரோபிக் நிறுவனம் பிரீ-பிரிண்ட்டாக (Pre-print) வெளியிட்டுள்ளது. அதாவது, இது பிற அறிவியல் நிபுணர்களின் முறையான மறுஆய்வுக்கு (Peer-review) இன்னும் உட்படவில்லை. மேலும், இந்த புதிய அமைப்பின் உண்மையான முழுமையான செயல்பாடு என்ன என்பது இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை என்பதையும் அந்நிறுவனம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.
கிளாட் ஏஐ கண்டறிந்தது உண்மையில் என்ன?
புதிய உயிரியல் அமைப்புக்கு 'ART' (Array-associated Reverse Transcriptase) என்று பெயரிடப்பட்டு உள்ளது. ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் (Reverse Transcriptase) இது என்சைம் (நொதி) ஆகும். பொதுவாக செல்கள் செய்யும் வேலைக்கு மாறாக, இது ஆர்.என்.ஏ-வை (RNA) படித்து அதற்கு இணையான டி.என்.ஏ-வை (DNA) உருவாக்குகிறது. சில பாக்டீரியாக்கள் வைரஸ்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அடிப்படை நோய் எதிர்ப்புத் தற்காப்பாக இந்த என்சைம்களைப் பயன்படுத்துகின்றன.
இந்த என்சைமிற்கு மிக அருகிலேயே ஒரு நீண்ட டி.என்.ஏ தொடர் அமைந்திருப்பதை கிளாட் ஏஐ கவனித்தது. அது சீரான இடைவெளியில் மீண்டும் மீண்டும் வரும் தொடர்களைக் (Repeat array) கொண்டிருந்தது. இந்த அமைப்பானது புகழ்பெற்ற CRISPR தொழில்நுட்பத்தின் மிக முக்கிய அடையாளமாகும். இதுவரை இத்தகைய கட்டமைப்பு மிகச் சில அமைப்புகளில் மட்டுமே காணப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை விஞ்ஞானிகளால் 'புரோகிராம்' செய்யக் கூடியவை. அதாவது குறிப்பிட்ட ஒரு இடத்தில் டி.என்.ஏ-வை வெட்டவோ, நகலெடுக்கவோ அல்லது ஒட்டவோ விஞ்ஞானிகளால் அவற்றுக்குக் கட்டளையிட முடியும்.
ஏ.ஐ எவ்வாறு இந்த புதிய அமைப்பைக் கண்டறிந்தது?
மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தாத உயிரியல் மூலக்கூறுகளைக் கொண்டு, பயிற்சி பெற்ற உயிரியலாளர்களைக் கொண்டு கலிபோர்னியாவின் பே ஏரியாவில் (Bay Area) ஆந்த்ரோபிக் நிறுவனம் பயோடெக் ஆய்வகத்தை (Wet lab) நடத்தி வருகிறது. பொது டி.என்.ஏ தரவுத் தளங்களில் புரியாத பல வடிவங்களை ஆராயும் 'ஜீனோம் மைனிங்' (Genome mining) பணியே கிளாட் ஏஐ-க்கு வழங்கப்பட்டது:
சுமார் 950 கிளாட் ஏஐ ஏஜென்ட்கள் (AI Agents) ஒருங்கிணைந்து, 2,00,000-க்கும் மேற்பட்ட ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ்களை வெறும் 21 மணி நேரத்தில் அலசி ஆராய்ந்தன. இதற்காக 210 மில்லியன் டோக்கன்களை (Tokens) பயன்படுத்திய ஏஐ, இறுதியில் 20 வலுவான முக்கியத் தேர்வுகளாகச் சுருக்கியது. ஒரு மனித ஆய்வாளர் தனித்துச் செய்தால் பல வாரங்கள் அல்லது மாதங்கள் எடுக்கக்கூடிய இந்த வேலையை கிளாட் ஏஐ சில மணி நேரங்களிலேயே முடித்துக் காட்டியுள்ளது.
டி.என்.ஏ வரிசைகளை ஆராய்ந்த ஒரு ஏஐ ஏஜென்ட், இந்த அமைப்பைப் "பிரமிக்க வைக்கும் ஒன்று" எனக் குறிப்பிட்டு, இது CRISPR போன்ற அமைப்பை ஒத்து இருப்பதை அடையாளம் கண்டது. பின்னர் ஒரு மனித விஞ்ஞானியைப் போலவே, அந்தத் தொடர்களை எண்ணி, அவற்றின் இடைவெளிகளை அளவிட்டு, இதற்கு முன்பு அறிவியல் உலகில் இதைக் கண்டுபிடித்துள்ளார்களா என்று அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும் சரிபார்த்து உறுதி செய்தது.
அறிவியலை ஏஐ தானாகவே செய்துவிடுமா?
முழுமையாக இல்லை. கணினி வழியிலான தேடல் மற்றும் வழிகாட்டுதலை மட்டுமே கிளாட் ஏஐ செய்தது. குறிப்பிட்ட புரதத்தை உருவாக்குவது மற்றும் அதனைப் பரிசோதிப்பது போன்ற அனைத்து ஆய்வகப் பணிகளையும் மனித விஞ்ஞானிகளே நேரடியாக மேற்கொண்டனர். கிளாட் ஏஐ தரவுகளைத் தேடி, குறிப்பிட்ட அமைப்பைக் கண்டறிந்து, அடுத்ததாக எதைப் பரிசோதிக்கலாம் என்று யோசனைகளை மட்டுமே வழங்கியது.
CRISPR உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய எம்ஐடி (MIT) விஞ்ஞானி ஃபெங் ஜாங் (Feng Zhang), இந்த ஆய்வறிக்கையை ஆய்வு செய்துவிட்டு, இது உண்மையிலேயே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டுகிறது; மேலும் விரிவான ஆய்வுகளுக்குத் தகுதியானது என்று தெரிவித்துள்ளார். அதே சமயம், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகக் குழு ஒன்றும் தனியாக இது போன்ற ஒரு என்சைம் அமைப்பைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதன் செயல்பாடு தெரியாதபோது, இது ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
ஏனெனில், உயிரித் தொழில்நுட்பத்தின் (Biotechnology) பல புரட்சிகர கண்டுபிடிப்புகள் இப்படித்தான் தொடங்கின. மருத்துவ உலகையே மாற்றிய CRISPR கூட, அதன் பயன்பாடு என்னவென்று மனிதர்களுக்குத் தெரிய வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு விசித்திரமான தொடர்ச்சியான வடிவமாகவே முதலில் கண்டறியப்பட்டது.
ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆரம்பகட்ட சோதனைகளின்படி, ART அமைப்புக்கு அருகிலுள்ள டி.என்.ஏ வெற்றிகரமாக ஆர்.என்.ஏ-வாகப் படிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம், இந்த அமைப்பையும் எதிர்காலத்தில் மருத்துவத் தேவைக்கேற்ப 'புரோகிராம்' செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. மனித குலத்திற்குப் பயன்படும் புதிய மருத்துவக் கருவியாக இது உருவெடுக்குமா என்பதைத் தீர்மானிக்க, வழக்கமான பாரம்பரிய ஆய்வகப் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

