- Home
- டெக்னாலஜி
- வீட்டின் இருண்ட மூலையில் கிடந்த பழைய சிப்பி ஓவியம்... வெறும் ரூ.2,500-க்கு வாங்கிய நபருக்கு கொட்டிய ரூ.11 கோடி அதிர்ஷ்டம்!
வீட்டின் இருண்ட மூலையில் கிடந்த பழைய சிப்பி ஓவியம்... வெறும் ரூ.2,500-க்கு வாங்கிய நபருக்கு கொட்டிய ரூ.11 கோடி அதிர்ஷ்டம்!
மிச்சிகனில் ஒரு பழைய வீட்டுப் பொருட்கள் விற்பனையில் வெறும் $30-க்கு (சுமார் ரூ.2,500) வாங்கப்பட்ட ஒரு சிறிய சிப்பி ஓவியம், நியூயார்க் ஃப்ரீமேன்ஸ் ஏலத்தில் வரலாறு காணாத வகையில் $13,52,600 (சுமார் ரூ.11.3 கோடி) விலைக்கு விற்று சாதனை படைத்துள்ளது.

வீட்டின் இருண்ட மூலையில் கிடந்த பழைய சிப்பி ஓவியம்!
பழைய பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் எஸ்டேட் சேல் (Estate sale) பக்கமெல்லாம் போனால் என்னகிடைக்கும்? பழைய கிராமபோன் தட்டுகளோ? பழங்காலத்து நாற்காலியோ கிடைக்கலாம் என்றுதான் பலரும் நினைப்பார்கள். மிச்சிகனைச் சேர்ந்த அந்த நபரும் அப்படித்தான் தேடிப் போனார். ஆனால், அங்கே அவருக்காகக் காத்திருந்தது கற்பனைக்கும் எட்டாத ஒரு ஜாக்பாட்.
வீட்டின் குறுகலான நடைபாதையின் இருண்ட மூலையில், ஒரு சிறிய ஓவியம் அனாதையாகத் தொங்கிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு வெறும் 8-க்கு-11 அங்குல கேன்வாஸ் துணி; அதில் ஏதோ சில கடற்சிப்பிகள் வரையப்பட்டிருந்தன. அங்கு வந்த மற்றவர்கள் அதை சாதாரண ஓவியமாக நினைத்துக் கண்டும் காணாமல் கடந்து போயினர். ஆனால், நீண்ட நாட்களாகக் கலைப் பொருட்களைச் சேகரித்து வரும் அந்த நபரின் கூர்மையான கண்கள் மட்டும் ஒரு நொடி உறைந்து நின்றன. அந்த ஓவியத்தின் அடியில் மிகச் சிறியதாக ஒரு கையெழுத்து இருந்தது: ‘Abercrombie’ (அபெர்க்ரோம்பி).
பார்த்த மாத்திரத்திலேயே அது ஏதோ சாதாரண ஓவியம் அல்ல என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அதன் விலை என்ன தெரியுமா? வெறும் 30 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,500). ஒரு நொடி கூட தாமதிக்காமல், தன் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கொடுத்து அந்த ஓவியத்தைச் சொந்தமாக்கிக் கொண்டார்.
வெறும் $30 முதலீட்டில் வரலாறு காணாத ஜாக்பாட்!
வெறும் கையெழுத்தை மட்டுமே வைத்து அது அசல் என்று நம்பிவிட முடியாது என்பது அவருக்குத் தெரியும். உண்மை என்னவென்று கண்டறிய தன் குடும்ப விடுமுறைப் பயணத் திட்டத்தையே மொத்தமாக மாற்றினார். மில்வாக்கி கலை அருங்காட்சியகத்தில் நடைபெற்று வந்த கெர்ட்ரூட் அபெர்க்ரோம்பியின் ‘The Whole World Is a Mystery’ என்ற கண்காட்சிக்குச் சென்றார்.
அங்கே கையேட்டைப் புரட்டியவருக்கு மயிர்க்கூச்செறியும் காட்சி காத்திருந்தது. 1952-ம் ஆண்டு சிகாகோ ட்ரிப்யூன் நாளிதழில் வெளியான ஒரு பழைய புகைப்படத்தில், இவர் கையில் வைத்திருக்கும் அதே ஓவியம் அதன் அசல் சட்டகத்தோடு அச்சு அசலாக இடம்பெற்றிருந்தது.
உடனே பிரபல அபெர்க்ரோம்பி கலை ஆய்வாளர் டாக்டர் சூசன் வெய்னிங்கரிடம் அதைக் காட்டினார். படத்தை ஆராய்ந்த அவர், இது 100% அசல் கெர்ட்ரூட் அபெர்க்ரோம்பியின் கைவண்ணமே என்று அதிகாரப்பூர்வமாகச் சான்றளித்தார். அடுத்த சில நாட்களில், உலகப் புகழ்பெற்ற நியூயார்க் ஃப்ரீமேன்ஸ் (Freeman’s) ஏல நிறுவனத்தின் மேடைக்கு அந்த ஓவியம் கொண்டு செல்லப்பட்டது.
75 ஆண்டுகால மர்மம்: யார் இந்த மெரியம்?
கெர்ட்ரூட் அபெர்க்ரோம்பி சிகாகோவின் புகழ்பெற்ற மாய யதார்த்தவாத (Surrealist) பெண் ஓவியர். 1951-ல் அவரால் வரையப்பட்ட ‘Alderman Merriam’s Shells’ என்ற இந்த ஓவியம், கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக உலகத்தின் பார்வையில் படாமல் எங்கோ மறைந்திருந்தது.
சாம்பல் நிறத் தரை, அதில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட 9 சிப்பிகள்... அவற்றுக்கு மேலே ஒரு கறுப்புச் சுவரில் நூலால் தொங்கவிடப்பட்டு மிதப்பது போன்ற ஒரு கூம்பு வடிவ சிப்பி எனப் பார்ப்பவர்களைக் கட்டிப்போடும் மாயம் அதில் இருந்தது. அந்த சிப்பிகளும், அதன் உரிமையாளரான ராபர்ட் மெரியமும் நிஜமானவர்கள். மெரியம் என்பவர் அபெர்க்ரோம்பி வாழ்ந்த பகுதியின் மக்கள் பிரதிநிதி.
1950-களில் தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் ஜான் ரெனால்ட்ஸுக்கு நன்றிக் கடனாக அபெர்க்ரோம்பி அன்பளிப்பாகக் கொடுத்த இந்த ஓவியம், இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது.
ஏல அரங்கில் சுழன்றடித்த சுத்தியல்: $30 to $1.35 மில்லியன்!
ஏல நிறுவனம் இந்த ஓவியம் அதிகபட்சமாக $1.50 லட்சம் முதல் $2.50 லட்சம் வரை போகலாம் என்றுதான் எதிர்பார்த்தது. ஆனால் அக்டோபர் 1 அன்று நியூயார்க் ஏல அரங்கில் நடந்தது ஒரு மேஜிக்.
தொலைபேசி மற்றும் ஆன்லைன் வழியாக ஏலம் கேட்டவர்களிடையே கடுமையான போட்டி வெடித்தது. தொகைகள் எகிறிக்கொண்டே சென்று, இறுதியாக ஏலச்சுத்தியல் அடித்து முடிக்கப்பட்டபோது தொகை $10,60,000 (சுமார் 1.06 மில்லியன் டாலர்)! கூடுதல் கட்டணங்களையும் சேர்த்து மொத்தம் $13,52,600—அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.3 கோடி. கெர்ட்ரூட் அபெர்க்ரோம்பியின் வரலாற்றிலேயே ஒரு மில்லியன் டாலரைத் தாண்டி விற்ற முதல் ஓவியம் என்ற இமாலய வரலாற்றுச் சாதனையை இது படைத்தது.
$30 ஓவியம் ஏலத்தில் $1.35 மில்லியனுக்கு விற்று சாதனை!
இந்த விற்பனை குறித்து ஃப்ரீமேன்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சாக் விர்சம் கூறும்போது;
ஒரு நல்ல முடிவில்லாத விசித்திரக் கதை நிறைவடையாது. அபெர்க்ரோம்பியின் இந்த ஓவியம் வரலாற்றுச் சாதனை படைத்திருப்பது ஒரு தேவதைக் கதையின் நிஜ முடிவு போன்றது. கால வெள்ளத்தில் அனாதையாக மறைந்து போயிருக்க வேண்டிய ஒரு மகத்தான கலைப்படைப்பைக் காப்பாற்றிய அந்தக் கழுகுப் பார்வைகொண்ட மனிதருக்கு நல்ல விஷயம் நடந்ததில் எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி என்றார்.
வீட்டின் இருண்ட மூலையில் ரூ.2,500-க்குக் கைவிடப்பட்டுக் கிடந்த ஒரு சின்ன சிப்பி ஓவியம், இன்று ரூ.11 கோடிகளை அள்ளிக் குவித்து சர்வதேசக் கலை உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

