விக்கிபீடியாவை காப்பி அடிக்கும் க்ரோகிபீடியா! எலான் மஸ்கை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!
எலான் மஸ்கின் xAI நிறுவனம், விக்கிபீடியாவிற்குப் போட்டியாக 'க்ரோகிபீடியா' என்ற AI கலைக்களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விக்கிபீடியாவைப் போன்றே இருந்தாலும், பல கட்டுரைகள் அங்கிருந்து நகலெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

க்ரோகிபீடியா AI கலைக்களஞ்சியம்
உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, விக்கிபீடியாவுக்குப் போட்டியாக 'க்ரோகிபீடியா' (Grokipedia) என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் புதிய இணைய அறிவுத் தளத்தை (Online Knowledge Database) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த க்ரோகிபீடியா தளத்தில், இன்று (அக்டோபர் 28, 2025) நிலவரப்படி சுமார் 8,85,279 கட்டுரைகள் உள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல மேம்பாடுகள் மற்றும் புதுப்பிப்புகள் வரும் என்று எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார். க்ரோகிபீடியாவின் பயனர் இடைமுகம் (User Interface) விக்கிபீடியாவைப் போலவே உள்ளது. பயனர்கள் தலைப்புகளைத் தேடலாம், உட்பிரிவுகளை ஆராயலாம், துணைப் பிரிவுகளைப் பார்வையிடலாம், மேலும் மேற்கோள் காட்டப்பட்ட தகவல்களைச் சரிபார்க்கலாம்.
காப்பி அடித்த கட்டுரைகள்
இருப்பினும், உரிமம் பெற்ற படங்கள், மல்டிமீடியா அம்சங்கள், தொடர்புடைய தலைப்புகளுக்கான ஹைப்பர்லிங்குகள், விளக்கப் படங்கள் மற்றும் வெளிநாட்டு மொழி கட்டுரைகள் போன்ற முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெறவில்லை. மேலும், தொழில்நுட்ப செய்தி நிறுவனமான 'தி வெர்ஜ்' (The Verge), பல க்ரோகிபீடியா கட்டுரைகள் விக்கிபீடியாவில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாகவோ அல்லது விக்கிபீடியா பக்கங்களின் பகுதிகள் அப்படியே காப்பி அடிக்கப்பட்டதாகவோ தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு க்ரோகிபீடியா பக்கங்களின் கீழே, "இந்த உள்ளடக்கமானது விக்கிபீடியாவிலிருந்து பெறப்பட்டது, இது கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன்-ஷேர்அலைக் 4.0 உரிமம் (Creative Commons Attribution-ShareAlike 4.0 License) பெற்றது" என்று ஒரு அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
‘உண்மை மட்டுமே இலக்கு’
சர்ச்சைக்குரிய விஷயங்களை இந்த இணையக் கலைக்களஞ்சியம் கையாளும் விதத்தைப் பாராட்டி, வலதுசாரிகளும் பழமைவாதிளும் விக்கிபீடியாவுக்குப் பதிலாக க்ரோகிபீடியாவைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து 'X' தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், க்ரோக் (Grok) மற்றும் Grokipedia.com-இன் இலக்கு முழுமையான உண்மை மட்டுமே எனத் தெரிவித்துள்ளார். க்ரோகிபீடியா அனைவருக்குமானது (Open Source), இலவசமானது என்றும் அவர் மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.
மேலும், க்ரோக் AI-யை பயன்படுத்தி கட்டுரைகளை சேர்க்க, மாற்ற அல்லது நீக்க பயனர்கள் கோர முடியும் என்றும் எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.