இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை.. 100 டெர்மினல்களை இறக்கும் எலான் மஸ்க்!
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்க 9 கேட்வே எர்த் ஸ்டேஷன்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சோதனை ஓட்டத்திற்காக 100 டெர்மினல்களை இறக்குமதி செய்ய மட்டுமே தற்போது அனுமதி பெற்றுள்ளது.

ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இன்டர்நெட் சேவை
உலகப் பணக்காரர் எலான் மஸ்கின் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் (Starlink), இந்தியாவில் தனது சேவையைத் தொடங்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்ற விரைவில் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 இடங்களில் கேட்வே எர்த் ஸ்டேஷன்
எகனாமிக் டைம்ஸ் (ET) நாளிதழில் வெளியான செய்தியின்படி, ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் தனது வர்த்தகச் சேவையைத் தொடங்குவதற்காக மும்பை, நொய்டா, லக்னோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 9 'கேட்வே எர்த் ஸ்டேஷன்கள்' (Gateway Earth Stations) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையங்கள், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் நெட்வொர்க்கை நாட்டின் தரைவழி இணைய அமைப்புகளுடன் இணைக்கும் வகையில் செயல்படும்.
ஸ்டார்லிங்க் நிறுவனம் சண்டிகர், ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் நொய்டா ஆகிய முக்கிய நகரங்களில் இந்த கேட்வே எர்த் ஸ்டேஷன்களை அமைக்க உத்தேசித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடை
ஸ்டார்லிங்க் தனது திட்டமிட்ட கேட்வே நிலையங்களின் செயல்பாடுகளுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு நிபுணர்களை இந்தியாவுக்குள் கொண்டுவர விரும்பியது. ஆனால், உள்துறை அமைச்சகம் அதற்கு உடனடியாக அனுமதி வழங்க மறுத்துள்ளது.
வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான பாதுகாப்புச் சரிபார்ப்பை (Security Vetting) முடிக்கும் வரை, இந்தியர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
சோதனைக்காக 100 டெர்மினல்கள் இறக்குமதி
தற்போது செயற்கைக்கோள் சேவை சோதனைகளுக்காக 100 பயனர் முனையங்களை (User Terminals) மட்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதிசெய்யவும் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் கடுமையான நெறிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
சோதனைகளுக்காக V4 மற்றும் மினி பயனர் முனையங்கள், கேட்வே ஆண்டெனாக்கள், HP பிளாட் டெர்மினல்கள் மற்றும் Gen 3 ரவுட்டர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட சாதனங்களை மட்டுமே நிறுவ ஸ்டார்லிங்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்த பின், ஒழுங்குமுறை அனுமதி கிடைத்ததும் ஸ்டார்லிங்க் சேவை வர்த்தகப் பயன்பாட்டிற்கு மாற்றப்படும்.
பாதுகாப்பு விதிகள் மற்றும் தரவுகள்
ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது முதல் தலைமுறைச் செயற்கைக்கோள் அமைப்பைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் 600 ஜிகாபிட்ஸ் (Gbps) அலைவரிசைத் திறன் வழங்க விண்ணப்பித்துள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்படுவதை நிரூபிப்பதற்காகத் தற்காலிக அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சோதனையின்போது உருவாக்கப்படும் அனைத்து தரவுகளும் இந்திய எல்லைக்குள்ளேயே சேமிக்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவப்பட்ட டெர்மினல்கள் (terminals) பற்றிய பெயர், இருப்பிடம் மற்றும் துல்லியமான புவியியல் தரவுகளை (geographic coordinates) தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஸ்டார்லிங்க் தொடர்ந்து வழங்க வேண்டும்.
மேலும், சோதனை கட்டம் வெற்றிகரமாக முடியும் வரை, ஸ்டார்லிங்க் இந்தியாவில் கட்டணம் வசூலிக்கும் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.