தீபாவளி போனஸ்னு வாட்ஸ்-அப்ல மெசேஜ் வருதா? உஷார்! அக்கவுண்ட் மொத்தமா காலியாயிடும்!
Diwali Bonus Scams: தீபாவளி போனஸ் என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் வரும் போலி இணைப்புகளைக் க்ளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. இந்த மோசடியில் இருந்து எப்படி தப்பிப்பது? என விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி போனஸ்னு வாட்ஸ்அப்ல மெசேஜ் வருதா? உஷார்!
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. இந்த பண்டிகை கொண்டாட்டத்தை மோசடி கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது. உங்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் அல்லது எஸ்.எம்.எஸ்-ல் இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறதா? "வாழ்த்துகள்! தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு / மத்திய அரசு உங்களுக்கு ரூ.5,000 போனஸ் வழங்குகிறது. கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்." > கூடவே http://diwali-bonus-gov.in என்று ஒரு இணைப்பு இருக்கும். பார்ப்பதற்கு அப்படியே அரசாங்க வலைத்தளம் மாதிரியே இருக்கும். ஆனால் உஷார், இது ஒரு பெரிய ஆபத்து.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
தமிழக அரசின் சைபர் செக்யூரிட்டி பிரிவு இந்த இணைப்புகள் எல்லாமே நூறு சதவீதம் போலி என்று கூறியுள்ளது. அந்த இணைப்பை க்ளிக் செய்தால், ஒரு படிவம் (Form) திறக்கும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி எண், வங்கி கணக்கு, [ஆதார் எண் / Aadhaar Redacted] என எல்லாவற்றையும் கேட்பார்கள். சில நேரங்களில், "போனஸ் பணத்தைப் பெற ₹99 செயலாக்கக் கட்டணம் (Processing Fee) செலுத்துங்கள்" என்று கூடச் சொல்வார்கள்.
நீங்கள் உங்கள் தகவல்களைக் கொடுத்த உடனே, ஹேக்கர்கள் உங்கள் தொலைபேசியில் ஒரு ஏபிகே (APK) கோப்பு அல்லது தீங்கிழைக்கும் மென்பொருளை (Malware) நிறுவிவிடுவார்கள். அதன் பிறகு உங்கள் ஒருமுறை கடவுச்சொல் (OTP), யு.பி.ஐ பின் (UPI PIN) எல்லாமே அவர்கள் கைக்குப் போய்விடும். அடுத்த நிமிஷமே உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் மொத்தமும் காணாமல் போய்விடும்.
சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை
எந்த ஒரு அரசும் வாட்ஸ்அப் இணைப்பு மூலமாக தீபாவளி போனஸ் கொடுக்காது. ஆகவே "தீபாவளி போனஸ் / இலவச பரிசு என்று வரும் இணைப்புகளை க்ளிக் செய்யாதீர்கள். இதெல்லாம் மோசடி. சந்தேகப்படும்படி எந்த இணைப்பு வந்தாலும் அதை யாருக்கும் பகிராதீர்கள் (Forward செய்யாதீர்கள்)" என்று சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த மோசடி தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுக்கவே பரவி வருகிறது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வருடமும் இதே மாதிரி ‘தீபாவளி இலவச ரீசார்ஜ்’ என்று சொல்லி நிறைய பேரை ஏமாற்றியுள்ளனர்.
மோசடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
வாட்ஸ் அப்பில் வரும் லிங்க் இணைப்பை க்ளிக் செய்யாதீர்கள்: அரசாங்கத் திட்டங்களுக்கு .gov.in தவிர வேறு எந்த இணைப்பையும் நம்பாதீர்கள். http://diwali-bonus.com, http://gov-bonus-apply.net மாதிரியான இணைப்புகள் எல்லாமே போலி. இணைப்பு மூலமாக எந்த ஒரு செயலியையும் (App) பதிவிறக்கம் செய்யச் சொன்னால், கண்டிப்பாகச் செய்யாதீர்கள்.
தொலைபேசியில் யாராவது அரசாங்க அதிகாரி மாதிரி பேசி [ஆதார் / Aadhaar Redacted], ஓ.டி.பி (OTP), வங்கி விவரங்களைக் கேட்டால் கொடுக்காதீர்கள். ஏதாவது திட்டத்தைப் பற்றிச் செய்தி வந்தால், சம்பந்தப்பட்ட அரசு துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் சென்று சரிபாருங்கள். இந்த மாதிரி செய்தி வந்தால் உடனே 1930 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது http://cybercrime.gov.in வலைத்தளத்தில் புகார் அளிக்கவும். தெரியாமல் கூட உங்கள் நண்பர்களுக்கு இதை Forward செய்யாதீர்கள்.
பண்டிகை காலத்தில் சந்தோஷமாக இருங்கள், ஆனால் ஒரு கிளிக்கில் உங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்துவிடாதீர்கள். வாட்ஸ்அப் இணைப்பு மூலமாக அரசாங்கம் எப்பவுமே போனஸ் வழங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.





