1 ரூபாய்க்கு தினமும் 2GB டேட்டா.. தூள் கிளப்பும் பிஎஸ்என்எல் தீபாவளி ஆஃபர்!
பிஎஸ்என்எல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1-ல் புதிய சிம் கார்டை வழங்குகிறது. இந்தச் சலுகையின் கீழ், 30 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டாவும் கிடைக்கும். வாய்ஸ் அழைப்புகளும் முற்றிலும் இலவசம்.

பிஎஸ்என்எல் தீபாவளி சலுகை அறிவிப்பு
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும் மிகக் குறைந்த விலையிலான தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது.
இந்தச் சலுகையின் கீழ், புதிய வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 1 மட்டுமே செலுத்தி ஒரு புதிய சிம் கார்டு மற்றும் அதனுடன் ஒரு மாதத்திற்கான (30 நாட்கள்) முழுமையான ப்ரீபெய்ட் திட்டப் பலன்களையும் பெறலாம்.
ஒரு ரூபாயில் சிம் கார்டு
புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு இலவசம். ரூ. 1 டோக்கன் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிற்கும் வாய்ஸ் கால் இலவசம். தினமும் 2GB அதிவேக டேட்டா. ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பலாம். இந்தச் சலுகைப் பலன்கள் முதல் 30 நாட்களுக்குக் கிடைக்கும்.
இந்தச் சிறப்புத் திட்டம் அக்டோபர் 15, 2025 முதல் நவம்பர் 15, 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இச்சலுகை புதிய பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
புதிய வாடிக்கையாளர்கள்
"பிஎஸ்என்எல் சுதேசி இணைப்புடன் உங்கள் வாழ்க்கையைப் பிரகாசமாக்குங்கள்" என்ற முழக்கத்துடன் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசின் தொலைத்தொடர்பு சேவைகளையும், மலிவான திட்டங்களையும் விரும்புவோரை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வலுவான நம்பிக்கையைப் பெற்றுள்ள பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களைக் கவரும் நடவடிக்கையாக இந்த ரூ. 1 திட்டத்தைக் கருதுகிறது.