- Home
- டெக்னாலஜி
- சல்லடையால் சலித்து எடுக்கப்பட்ட 45 லட்சம் ஆண்டு பொக்கிஷம்: இமயமலை ஆய்வின் மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி!
சல்லடையால் சலித்து எடுக்கப்பட்ட 45 லட்சம் ஆண்டு பொக்கிஷம்: இமயமலை ஆய்வின் மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி!
இமயமலை அடிவாரத்தில் 45 லட்சம் ஆண்டு பழமையான அரிய வகை மீன் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு! புவியியல் வரலாற்றை மாற்றும் விஞ்ஞானிகளின் புதிய சாதனை.

இமயமலை அடிவாரத்தில் 45 லட்சம் ஆண்டு மீன் படிமம் கண்டெடுப்பு
இமயமலை அடிவாரப் பகுதியில் சுமார் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இமயமலை வரலாற்றில் தரைவாழ் உயிரினங்களுக்குப் பின் முதல்முறையாக நீர்வாழ் உயிரினங்களின் தடயங்கள் சிக்கியுள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இமயமலை என்றாலே பனிச்சிகரங்களும், தரைவாழ் உயிரினங்களும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், அந்தப் பகுதியின் புவியியல் வரலாற்றையே மாற்றியெழுதும் விதமாக, சுமார் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதைபடிமங்களை ஆய்வாளர்கள் தற்போது கண்டெடுத்துள்ளனர்.
ஆய்வு & கண்டுபிடிப்பு விபரங்கள்
உத்தரகாண்ட் எல்லையில் உள்ள மோகந்த் பகுதியில், 'வாடியா இமயமலை புவியியல் ஆய்வு நிறுவனம்' (Wadia Institute of Himalayan Geology) இந்த ஆய்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதுவரை இப்பகுதியில் நிலவாழ் உயிரினங்களின் படிமங்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், முதல்முறையாக நீர்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரிதான மீன் இனங்கள்
மூத்த ஆய்வாளர் டாக்டர் நிங்தௌஜாம் சிங் தலைமையிலான குழுவினர் இந்த ஆராய்ச்சியை வழிநடத்தினர். இவர்கள் 3 வெவ்வேறு மீன் இனங்களின் காது எலும்புப் படிமங்களைக் கண்டறிந்துள்ளனர். இதில் ஸ்னேக்ஹெட் (Snakehead), கோபி (Goby) மற்றும் கௌராமி (Gourami) ஆகிய மீன் இனங்கள் அடங்கும். குறிப்பாக, இதில் 'கௌராமி' வகை மீன் படிமம் மிக அரிதானது ஆகும். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிற்குப் பிறகு, உலகிலேயே 2-வது முறையாக இப்போதுதான் இமயமலைப் பகுதியில் இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பழங்கால புவியியல் சூழல்
சுமார் 45 முதல் 48 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, மோகந்த் பகுதி இன்று இருப்பது போலன்றி, அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட அமைதியான நன்னீர் ஏரியாகவோ அல்லது மெதுவாக ஓடும் நதியாகவோ இருந்திருக்கலாம் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை வெறும் கற்கள் அல்ல, இழந்துபோன ஒரு காலத்தின் 'வாழ்வியல் எச்சங்கள்' என ஆய்வாளர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.
ஆய்வுக் குழு & பிற கண்டுபிடிப்புகள்
2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று, சல்லடைகள் மூலம் கழுவி, உலர்த்தி, நுண்ணோக்கி வழியாக ஆய்வு செய்தே இந்தப் படிமங்கள் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மீன் படிமங்களுடன் சேர்த்து, தற்கால எலிகளிலிருந்து மாறுபட்ட 'இந்திய புதர் எலி' ஒன்றின் புதைபடிமமும் சிக்கியுள்ளது. இந்த மகத்தான ஆய்வில் வாடியா நிறுவனத்துடன் இணைந்து சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகம், தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் தைவானின் அகாடமியா சினிகா ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஆய்வாளர்களும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
லட்சக்கணக்கான ஆண்டுகளில் இமயமலைப் பகுதியின் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி எப்படி மாறியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் டேட்டாக்கள் ஒரு புதிய வரலாற்றுப் பாதையைத் திறந்து வைத்துள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

