- Home
- Tamil Nadu News
- விஜய் யார் ஓட்டைப் பிரிப்பார்? அதிமுகவா? திமுகவா? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்
விஜய் யார் ஓட்டைப் பிரிப்பார்? அதிமுகவா? திமுகவா? ஜெ. உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் வருகைதான். அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய விவாதம். "விஜய் யார் ஓட்டைப் பிரிப்பார்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது அதிமுக மற்றும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் குறித்தும் கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் யார் ஓட்டை பிரிக்கப்போகிறார் என்பது குறித்து பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
அதில், தமிழக தேர்தல் களம் வழக்கமான இருமுனைப் போட்டியில் இருந்து நகர்ந்து, இன்று ஒரு மும்முனைப் போட்டியாக (சில இடங்களில் நான்கு முனை) உருவெடுத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு புதிய வரவு ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது என்றால் அது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் வருகைதான். அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய விவாதம், "விஜய் யார் ஓட்டைப் பிரிப்பார்?" என்பதுதான்.
ஆளும் தரப்பு: "விஜய் அதிமுகவின் ஓட்டுகளைத்தான் பிரிப்பார்" என்கிறார்கள். எதிர்தரப்பு: "அவர் திமுகவின் எதிர்ப்பு வாக்குகளைத்தான் கையாள்வார்" என்கிறார்கள். ஆனால், கள நிலவரத்தை உற்று நோக்கினால் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஓட்டை மட்டும் பிரிக்கப்போவதில்லை; மாறாக, ஒட்டுமொத்தமாக "சகட்டு மேனிக்கு" எல்லா பக்கமிருந்தும் வாக்குகளை அறுவடை செய்யப்போகிறார் என்பதே நிதர்சனம். இது மற்ற கட்சிகளுக்கு ஒருவிதமான கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.
விஜய் கட்சி ஆரம்பித்தபோது, அது வெறும் 'இளைஞர்களுக்கான கட்சி' என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால், காலம் நகர நகர சூழல் மாறிக் கொண்டிருக்கிறது. இளைஞர் சக்தி: மாற்றத்தை விரும்பும் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் அவர் பின்னால் அணிவகுக்கிறார்கள். மகளிர் ஆதரவு: சமீபத்திய கள ஆய்வுகள் பெண்களின் ஆதரவு விஜய் பக்கம் மெல்ல மெல்ல சாய்வதை உறுதிப்படுத்துகின்றன. பெரியவர்களின் பார்வை: "காலங்காலமாகப் பார்த்த முகங்களையே பார்த்தாயிற்று, இந்த முறை இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்த்தால் என்ன?" என்ற முதிர்ந்த எண்ணம் பெரியவர்கள் மத்தியிலும் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு "அமைதியான புரட்சிக்கு" வித்திட்டுக் கொண்டிருக்கின்றன.
அரசியல் கணிப்புகளைத் தாண்டி, ஜோதிட ரீதியாகவும் இந்த தேர்தல் ஒரு மிகப்பெரிய "அதிர்ச்சி வைத்தியத்தை" தரப்போவதாகப் பேச்சுகள் எழுகின்றன. இதுவரை கண்டிராத ஒரு வாக்கு சதவீத மாற்றத்திற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. "காக்காய் உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக" சிலருக்கு வெற்றி எளிதாகக் கிடைக்கலாம். ஆனால் அது உழைப்பைப் பொறுத்தே அமையும். தேர்தல் களத்தில் எத்தனையோ அலைகள் வீசலாம், ஆனால் ஒரு வேட்பாளரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது "கடைசி நேரக் களப்பணி" தான். வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்போ அல்லது தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயமோ இன்றி, கடைசி நிமிடம் வரை வாக்காளர்களைச் சந்திக்கும் கட்சியே இலக்கை எட்டும். மாற்றத்தை விரும்பும் மக்களின் மனநிலையை வாக்குகளாக மாற்றுவதற்குத் தொண்டர்களின் தீவிரமான உழைப்பு அவசியம்.
தமிழக அரசியலில் விஜய் அவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வது கசப்பான உண்மையாக இருந்தாலும் அல்லது இனிப்பான செய்தியாக இருந்தாலும், அதுதான் இன்றைய நிதர்சனம். இந்தத் தேர்தல் ஒரு தலைமுறை மாற்றத்திற்கு விதை போடுகிறது என்பதில் ஐயமில்லை. "நிதானமான திட்டமிடலும், தீவிரமான களப்பணியும் யாரைச் சென்றடைகிறதோ, அவரே கோட்டையை ஆளுவார் என தெரிவித்துள்ளார்.

