- Home
- Tamil Nadu News
- திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட் மீண்டும் யாருக்கெல்லாம் கிடைக்கும்.? தேமுதிக, பாமக நிலை என்ன.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா சீட் மீண்டும் யாருக்கெல்லாம் கிடைக்கும்.? தேமுதிக, பாமக நிலை என்ன.?
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ல் நடைபெறும். திமுக 4 இடங்களையும், அதிமுக கூட்டணிக் கட்சிகள் உதவியுடன் 2 இடங்களையும் பிடிக்க வாய்ப்புள்ளது. திமுக, வில் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து மீண்டும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அந்த வகையில் இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் படி ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், 10ஆம் தேதி வேட்புமனு மீது பரிசீலனையும், 11ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ள கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராஜ்யசபா தேர்தலில் 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிட்டால் தேர்தல் நடைபெறாது. ஒரு வேளை 6 இடங்களுக்கு கூடுதலான நபர்கள் போட்டியிடும் பட்சத்தில் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற ராஜ்யசபா உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் ஒரு ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஓட்டுக்கள் தேவை, அந்த வகையில், திமுகவை பொறுத்தவரை 4 இடங்களை கைப்பற்றக்கூடும், திமுகவிடம் தனித்து 131 எம்எல்ஏக்களை வைத்துள்ளது. எனவே தனித்து 3 எம்பிக்களை பெற முடியும். மேலும் கூட்டணி கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் 4 எம்பிக்களை பெற முடியும்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் உதவியோடு 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதிமுகவிடம் 66 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், அய்யப்பன் தனி அணியாக உள்ளனர்.
எனவே அதிமுகவிடம் 62 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். எனவே 2 இடங்களை பிடிக்க மேலும் 6 எல்எல்ஏக்கள் ஆதரவு தேவை. எனவே பாஜக எம்எல்ஏக்கள் 4 பேர் ஆதரவு அளித்தாலும் கூடுதலாக 2 பேர் தேவை ஏற்படும்.
எனவே பாமக அல்லது ஓபிஎஸ் அணியினர் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் 2 எம்பிக்களை கைப்பற்ற முடியும். அதே நேரம் திமுகவில் மீண்டும் யாருக்கு வாய்ப்பு வழங்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதி வழங்கப்படவுள்ளது.
திமுகவின் வழக்கறிஞராக உள்ள வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அடுத்தாக வைகோவிற்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அப்துல்லாவிற்கு பதிலாக கவிஞர் சல்மா ராஜ்யசபா போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் அதிமுகவிடம் உள்ள 2 எம்பி இடங்களை கேட்டு பாமக மற்றும் தேமுதிக நெருக்கடி கொடுத்து வருகிறது.
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணியை வலுப்படுத்த பாமக மற்றும் தேமுதிகவின் கூட்டணி அதிமுகவிற்கு தேவையாக உள்ளது. எனவே பாமக சார்பில் அன்புமணி, தேமுதிக சார்பாக எல்கே சுதீஷ் ஆகியோருக்கு ராஜ்யசபா சீட் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி தரப்போ தங்கள் கட்சியில் உள்ளவர்களுக்கே கொடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.
எனவே 2026ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியை பொறுத்து அடுத்து நடைபெறுகிற ராஜ்யசபா தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக திமுக- அதிமுக யாரை நிறுத்த போகிறது என தெரியவரும்.
