அரசியலில் என் ரூட்டே தனி.. எல்லாமே சர்ப்ரைஸ்ஸா நடக்கும்.. சசிகலா நம்பிக்கை
அரசியலில் எனது அணுகுமுறை தனித்துவமாக இருக்கும். தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதே என் நோக்கம். அதனை செய்து காட்டுவேன் என விகே சசிகலா தெரிவித்துள்ளார்.

பசும்பொன்னில் ஒன்றிணைந்த அதிமுக தலைவர்கள்
முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் அதிமுக, அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களும் மரியாதை செலுத்தினர். அதிமுக.வில் இருந்து நீக்கப்பபட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் இணைந்து அதிருப்தி அதிமுக உறுப்பினர் செங்கோட்டையனும் இணைந்து மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆர் காலம் முதல் அதிமுவை பார்த்து வருகிறேன்..
இதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம், செங்கோட்டையன் இணைந்து ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையும் சந்தித்து பேசினர். இதனால் பசும்பொன் கிராமம் அரசியல் களமாக மாறியது. இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “நான் எம்ஜிஆர் மறைவில் இருந்து அதிமுகவை பார்த்து வருகிறேன். உங்களால் எத்தனை பேரை தான் கட்சியில் இருந்து நீக்க முடியும்? அதிமுகவில் பழைய நிலை மீண்டும் திரும்பும்.
யார் துரோகி..?
யார் துரோகி என்ற கேள்வியை கட்சியின் அடிமட்ட தொண்டர்களிடம் கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். கட்சியை ஒன்றிணைக்கும் பணிகளை நான் தொடங்கிவிட்டேன். அதே போன்று அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுவது என் வழக்கம் கிடையாது. சற்று பொறுமையாக இருங்கள். என்னைப்பற்றி மூத்த தலைவர்களுக்கு தெரியும்.
ஜெயலலிதாவை எதிர்த்தவர்களைக் கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநயகர்களாகவும் நியமித்துள்ளோம். என்னுடைய பணி தனித்துவமாக இருக்கும். மேலும் அது தனியாக தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.