’வெற்றி’ வேல்.. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவ.. சீமானின் அடிவயிறு கலங்க வைக்கும் விஜய்
நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் பாஜக அரசுகளை விமர்சித்தார். கையில் வேல் ஏந்தியது, சீமானுடனான அவரது அரசியல் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.

தவெக தலைவர் விஜய்
நாகை மாவட்டம், அண்ணா சிலை அருகே இன்று பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய், “எல்லாருக்கும் என் அன்பான வணக்கம். எப்படி இருக்கீங்க? பண்றீங்களா? கடல்தாய் மடியில் இருக்கும் நாகப்பட்டினத்தில் நின்று பேசுவதால் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த ஊர் என் மனசுக்கு மிகவும் நெருக்கமானது” என்று தொடங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய விஜய், “இறால் வளர்ப்பு பண்ணைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். கடற்கரை காடுகளை அழித்து வரும் செயல்களை நிறுத்த வேண்டும்.
நாகையில் விஜய்
பிரச்சினையை தீர்க்க காவிரி தண்ணீரை கொண்டு வர அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. கடல்சார் கல்லூரி, மீன் தொழிற்சாலை போன்றவை அமைக்க முடிந்திருக்கலாம். ஆனால் இன்று வரை செய்யப்படவில்லை. வெளிநாட்டு முதலீடுகளை பற்றி சிரித்துக்கொண்டே பேசும் முதல்வர் சார் நேர்மையாக சொல்லுங்க, வெளிநாட்டு முதலீடா? அல்லது வெளிநாட்டில்தான் முதலீடா?” என்று கேள்வி எழுப்பினார் விஜய்.
நாகை மீனவர்களுக்கு ஆதரவு
“நாட்டின் மீன் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நாகையில், நவீன வசதிகள் இன்னும் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் குடிசை பகுதிகளில் வசிக்கிறார்கள். இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் நம் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு தீர்வு தேட வேண்டும் என்பதை முன்பே நான் வலியுறுத்தியிருக்கிறேன். மீனவர்களோடு நிற்பது என் கடமை. 14 ஆண்டுகளுக்கு முன்பு கூட நாகையில் மீனவர்களை தாக்கியதை கண்டித்து கூட்டம் நடத்தியிருந்தேன். அதனால் நாகையில் நான் வருவது புதிதல்ல” எனவும் அவர் தெரிவித்தார்.
ஈழத்தமிழர்களுக்கு குரல்
தொடர்ந்து பேசிய விஜய், “ஈழத்தமிழர்கள் தங்கள் தலைவனை இழந்து துயரத்தில் தவிக்கிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது பொறுப்பு. மீனவர்கள் சிரமப்படும்போது காகிதத்தில் கடிதம் மட்டும் எழுதி கடந்து போகும் போலி நாடகம் ஆடும் திமுக அரசு அல்ல நாங்கள். தமிழக மீனவர்களை பிரித்து பேசும் பாஜகவாதிகள் போலவும் இல்லை. நாம் உண்மையாக அவர்களோடு நிற்க வந்துள்ளோம்” என்று தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். பிறகு கையில் விஜய்க்கு வேலினை கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.
நாம் தமிழர் சீமான் மோதல்
சினிமா நடிகராக இருந்த விஜய், அரசியலுக்கு குதித்த பின் பெரும் வரவேற்பு பெற்றுள்ளார். சீமான் அடிக்கடி உரைகளில், "விஜய் மக்கள் உணர்வுகளை பயன்படுத்திக்கொள்கிறார், அரசியல் அனுபவம் இல்லை" என விமர்சித்து வருகிறார். அதற்கு பதிலாக, விஜய் தன்னுடைய பொதுக்கூட்டங்களில் நேரடியாக சீமானின் பெயரை குறிப்பிடாமல், "பிரிவினை பேசுபவர்கள், மக்கள் வாழ்வாதாரத்தை புறக்கணிப்பவர்கள்" என்று சுட்டிக்காட்டுகிறார்.
விஜய் கையில் வேல்
இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று நாகையில் ஈழத் தமிழர்கள் விஷயத்தை பேசியதோடு இல்லாமல், கையில் வேலையும் எடுத்து தமிழ் தேசிய அரசியலையும் தொட்டுள்ளார். ஏற்கனவே விஜய் Vs சீமான் மோதல் ஆனது உச்சத்தில் இருக்கும் நிலையில், இது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல இருக்கிறது. வரும் காலங்களில் இந்த மோதல் அதிகரிக்கும் என்றே கூறலாம்.