வேங்கை வயல் விஷயத்தில் புதிய யோசனை சொல்லும் தவெக தலைவர் விஜய்!
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
வேங்கை வயல் விஷயத்தில் புதிய யோசனை சொல்லும் தவெக தலைவர் விஜய்!
கடந்த 2022ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பல்வேறு சோதனைகள் மேற்கொண்ட போதும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் காவல்துறை மீதும் தமிழக அரசு மீதும் பல விமர்சனங்கள் எழுந்தன. இறுதியாக இந்த வழக்கில் விசாரணையை முடித்து கடந்த 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
Vengaivayal
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.
Chargesheet CBCID
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது. வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
TVK Vijay
ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.