வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
vellaiyan
வணிகர் சங்க தலைவர்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவராக இருந்த வந்த வெள்ளையன் ( வயது 76) வணிகப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் வணிகர் சங்கத்தை தொடங்கியவர். தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மூலம் வணிகப் பெருமக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தவர். வணிகர்கள் தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில்,. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நுரையீரல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
உடல்நிலை பாதிப்பால் காலமானார்
இது தொடர்பாக எம்.ஜி.எம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்: நுரையீரல் தொற்று நோய் காரணமாக, வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலையை மருத்துவ குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார். வெள்ளையனின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் அவருக்கு நோய் எதிர்ப்பு சிகிச்சையான ஆண்டிபயோடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளையன் தற்போது காலமாகியுள்ளார்.
காங்கிரஸ் இரங்கல்
தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வெள்ளையன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், த. வெள்ளையன் அவர்களது மறைவு தமிழக வணிகப் பெருமக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் வணிகர் சங்கப் பேரவையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.