- Home
- Tamil Nadu News
- சென்னையில் வரலாறு காணாத குளிர்..! மதியம் 1 மணிக்கும் டெல்லி, ஊட்டி போன்று நடுக்கம்!
சென்னையில் வரலாறு காணாத குளிர்..! மதியம் 1 மணிக்கும் டெல்லி, ஊட்டி போன்று நடுக்கம்!
தினமும் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் சூரியனை திட்டித் தீர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்ட சென்னை மக்கள், இன்று குளிரை தாங்க முடியாமல்''நாங்க திட்டினதை மனசுல வச்சிக்கிடாதய்யா.. வெளிய வந்துருய்யா'' என சூரியனிடம் கெஞ்சி வருகின்றனர்.

சென்னையில் இன்று அதியசம்; நண்பகலும் குளிர்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கடும் குளிர் நிலவி வருகிறது. மலைப்பிரதேசங்கள் மட்டுமின்றி தலைநகர் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடும் பனிமூட்டம் உள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் இன்று (ஜனவரி 11) வழக்கத்துக்கு மாறாக கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில வாரங்களாக அதிகாலையில் குளிர் வாட்டிய நிலையில், இன்று நண்பகலில் கூட கடுமையான குளிர் உள்ளது.
வெயிலுக்கு பழக்கப்பட்ட சென்னைவாசிகள்
சென்னையை பொறுத்தவரை சிறிய இடங்களில் பல லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதி. இங்கு லட்சக்கணக்கான வாகனங்கள் சாலையில் செல்வதாலும், தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதாலும், அதிகமான ஏசி இயந்திரங்கள் செயல்படுவதாலும் வெப்பம் அதிகரித்தே காணப்படும். மிக முக்கியமாக கடல் காற்று அதிகமாக வீசுவதால் வெப்பம் அதிகரித்து குளிர் மிகக் குறைவாகவே இருக்கும்.
இன்று ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர்
ஆனால் இன்று சென்னையில் அதிசயமாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலை பிரதேசங்களிலும், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் பகல் நேரங்களிலும் கடும் குளிர் நிலவுவது வாடிக்கையான ஒன்று. ஆனால் சென்னையில் இன்று சூரியன் சுட்டெரிக்கும் மதிய நேரத்திலும் ஊட்டி, கொடைக்கானல் போன்று குளிர் நிலவியது சென்னைவாசிகளை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
வாகன ஓட்டிகள் நடுக்கம்
அதுவும் சென்னையில் இன்று காலை முதல் சிறு மழைத்தூறலுடன் குளிரும் சேர்ந்து ஆட்டம் போடுவது, ''நாம இருப்பது சென்னை தானா? இல்லை வழிதவறி ஊட்டி, கொடைக்கானலுக்கு வந்துவிட்டோமா' என சென்னைவாசிகள் பேசும் அளவுக்கு ஆக்கி விட்டது.
மலைப்பிரதேசங்களில் குளிரை சமாளிக்க வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் தலை குல்லா, மப்ளர் ஆகியவற்றை அணிந்து செல்வதை பார்த்திருக்கலாம். அதே போல் இன்று சென்னையிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் குளிரை தாங்க முடியாமல் மப்ளர் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது.
சூரியனிடம் கெஞ்சும் சென்னைவாசிகள்
'என்னய்யா பெரிய ஊட்டி, கொடைக்கானல், இங்க வந்து பாருங்க' என சென்னைவாசிகள் சிலர் தலையில் குல்லா அணிந்து கொண்டு குளிரில் நடுக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். தினமும் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் சூரியனை திட்டித் தீர்ப்பதை வழக்கமாக்கிக் கொண்ட சென்னை மக்கள், இன்று ''நாங்க திட்டினதை மனசுல வச்சிக்கிடாதய்யா.. எப்படியாவது வெளிய வந்துருய்யா'' என சூரியனிடம் கொஞ்சும் அளவுக்கு இறங்கி விட்டனர்.
குளிர் அதிகரிப்பதற்கு என்ன காரணம்?
சென்னை மட்டுமல்ல சூரியபகவான் டென்ட் போட்டு குடியிருக்கும் திருச்சி, சேலம் என வெயிலுக்கு பெயர்போன பல இடங்களிலும் இன்று கடுமையான குளிர் வாட்டி வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் குளிர் அதிகரித்து வருவதும், பொதுவாக வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த கேரளாவில் வெப்பநிலை உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

