வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. மழை அவ்வளவு தானா? டெல்டா வெதர்மேன் சொல்வது என்ன?
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 14ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், டெல்டா மாவட்டங்களில் டிசம்பர் 11 வரை கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மழை ஊத்தி தள்ளியது. பின்னர் நவம்பர் மாதம் போதிய மழை பெய்யாத நிலையில் டிசம்பர் மாதம் தொடங்கத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது வெள்ள நீர் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வாட்டி வதைக்கும் குளிர்
தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் கடும் பனிபொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை இருக்கா இல்லையா என்ற தகவலை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம்
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 14ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
டெல்டா வெதர்மேன்
இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்ற தகவலை டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதாவது காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று முதல் 11 வரையிலாக தேதிகளில் அநேக இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாகும். மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களின் ஒரிரு கடலோர பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
தென் கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டிசம்பர் 10 அல்லது 11 ஆகிய தேதிகளில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களிலும் ஒரிரு முறை மழை எதிர்ப்பார்க்கலாம். மேற்கு மாவட்டங்கள் & உள் மாவட்டங்களிலும் லேசான/மிதமான மழைக்கு தான் வாய்ப்பு. பரவலான மழை வாய்ப்பு இல்லை.
காவிரி டெல்டா மாவட்டம்
டிசம்பர் 9 முதல் 12 ம் தேதி காலை வரை இந்த 5ம் சுற்று மழை காவிரி டெல்டா மாவட்டங்களை பிரதானமாக வைத்து பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரி டெல்டா விவசாயிகள் இன்று முதல் டிசம்பர் 12 வரை அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மழை நிறைவு பெற்றவுடன் டிசம்பர் 12 முதல் 15 வரை மழை இடைவெளி வேளாண்மை பணிகளை திட்டமிட சாதக அமையும் என தெரிவித்துள்ளார்.

