வெல்வோம் 200 படைப்போம் வரலாறு.. நிர்வாகிகள் மத்தியில் சூளுரைத்த உதயநிதி ஸ்டாலின்
வருகிற பிப்ரவரி-7 ஆம் தேதி அன்று விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு 2026 தேர்தல் வெற்றிக்கு அடித்தளம் அமைக்கட்டும் என சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெற்றிச் சந்திப்பு
சென்னையில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இன்று இந்த நிகழ்ச்சியில், மதுரை தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை உள்ள 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணியின் மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர அமைப்பாளர்கள் பங்கேற்றுள்ளீர்கள். தேர்தலை முன்னிட்டு, மிக முக்கியமான இந்தத் தென்மண்டலச் சந்திப்பை நாம் நடத்தவிருக்கின்றோம்.
இளைஞர் அணியைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சியும் இளைஞர் அணிக்கு வலுசேர்க்கும் விதத்திலும், அதே நேரத்தில் கழகத்திற்கு இன்னும் கூடுதல் வலிமை சேர்க்கும் விதத்திலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனமாகத் திட்டமிட்டுச் செய்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற வட மண்டல நிர்வாகிகள் சந்திப்பை மிகப்பெரிய ஒரு வெற்றிச் சந்திப்பாக, நடத்திக் காட்டினோம்.
ஏற்கனவே நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்டை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் மிகச் சிறப்பாக, மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக் காட்டினோம். அந்த மாநாட்டின் வெற்றிக்காக இங்கு வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய உழைப்பை, நூறு சதவிகிதம் வழங்கியுள்ளீர்கள். இதனைத் தொடர்ந்து இளைஞர் அணியின் சார்பில் தற்போது பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
எந்தப் பணியாக இருந்தாலும், அது தாய்க்கழக நிர்வாகிகளின் ஆலோசனைகளைப் பெற்று, அவர்களோடு கலந்து பேசி, அவர்களின் கருத்துகளையும் உள்வாங்கி, தலைவரின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் நடத்திக் காட்டுகிறோம்.
ஒன்றியம் முதல் பாகம் வரை
அடுத்தகட்டப் பணியாக இளைஞர் அணிக்கு ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு கிளை அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பாக அமைப்பாளர்களை இன்று அறிவித்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் ஒன்றியம் முதல் பாகம் வரை நியமனங்கள் நிறைவுபெற்ற பிறகு, இளைஞர் அணியில் மட்டும் குறைந்தபட்சம் 5 லட்சம் நிர்வாகிகள் இருப்பார்கள். எந்த இயக்கத்திலும் எந்த அணிக்கும் இப்படி ஒரு சிறப்பு கிடைத்ததில்லை.
குறிப்பாக, இந்தத் தெற்கு மண்டலத்தில் உள்ள 58 தொகுதிகளில் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முரசொலியில் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதுவரை 47 தொகுதிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய நிர்வாகிகள் எவருமே எளிதாக, பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்படவில்லை. மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்களிடம் பரிந்துரை பெறுகிறோம். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில் அன்பகத்திலிருந்து ஒரு குழு அமைக்கப்பட்டு, நாங்களே ஒவ்வொருவரையும் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் பின்னணி, கழக ஆர்வம், கொள்கைப் பிடிப்பு ஆகியவற்றைச் சரிபார்க்கின்றோம். அதன் அடிப்படையில் அவர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டைக் கணக்கில் கொண்டுதான் தொகுதி வாரியாக அறிவிப்புகள் வெளிவருகின்றன. அவர்களையெல்லாம் ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்து, 2026 சட்டமன்றத் தேர்தற்பணிக்கு அவர்களைத் தயார் செய்வதுதான் இந்த நிர்வாகிகள் சந்திப்பின் நோக்கம்.
சந்திப்பின் ஒரே நோக்கம்
நம் கழகத்தின் கொள்கைகளை, அரசின் சாதனைகளை உள்வாங்கி கழகப் பணியை வலிமையோடு செய்ய வேண்டும் என்பதே இச்சந்திப்பின் ஒரே நோக்கம். இச்சந்திப்பு, தேர்தல் நேரத்தில் நடைபெற்றாலும், அது தேர்தலுக்குப் பயனுள்ள ஒரு கூட்டமாகவே அமையும். ஆனால், அது மட்டுமே நம்முடைய இலக்கல்ல. எதிர்காலத்தில் கழகத்திற்கு மேலும் பல இளைஞர்களை அழைத்து வந்து வலிமை சேர்க்கும் ஒரு பாசறைக் கூட்டமாக இச்சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகள், விருதுநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அதற்கான பணிகளை நம் முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கம் தென்னரசு அவர்களும், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களும் தொடர்ந்து மேற்பார்வையிட்டு வருகின்றனர். நானும் பத்து நாட்களுக்கு முன்பு அங்குச் சென்று பணிகளைப் பார்வையிட்டு வந்தேன்.
நம் முதன்மையான இலக்கு, இந்தத் தெற்கு மண்டலத்தில் நியமிக்கப்பட்டுள்ள அத்தனை நிர்வாகிகளும் எவரும் விடுபடாமல் இச்சந்திப்பிற்கு வருகை தர வேண்டும் என்பதாகும். அதற்கெனத் தனியாக வருகைப் பதிவு செய்யப்படும். அடையாள அட்டைகள் இங்கிருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி மற்றும் பேரூரிலிருந்தும் இளைஞர் அணியின் புதிய நிர்வாகிகளை இச்சந்திப்பிற்கு அழைத்து வருவதற்கான வசதிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். உங்களுக்கான உதவிகளை அன்பகத்திலிருந்து செய்வார்கள்.
பட்டியலின் அடிப்படை
புதிய நிர்வாகிகள் பட்டியலை கழக மாவட்டம் வாரியாக அச்சிட்டு, இளைஞர் அணி துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மூலமாக அனைவரின் கைகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அந்தப் பட்டியலின் அடிப்படையில் எதற்காக இந்த நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்து, அவர்களை நீங்கள் அழைத்து வர வேண்டும்.
நிர்வாகிகள் சந்திப்பு அன்று விருதுநகருக்கு அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள் உடனடியாக வந்துவிட முடியும். ஆனால், கன்னியாகுமரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வருவதற்கு இரண்டு மூன்று மணி நேரம் ஆகும். எனவே, அனைத்துப் பேருந்துகளும் ஒரே நேரத்தில் திடலுக்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். உள்ளே வர முடியாத நெருக்கடி உண்டாகும். அதற்கு ஏற்ப நாம் அனைவரும் திட்டமிட்டு அந்தந்த மாவட்டங்களிலிருந்து கிளம்ப வேண்டும்.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கழகத் தலைவர் மற்றும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் நிர்வாகிகளுக்குத் தமது அறிவுரைகளை வழங்க உள்ளார்.
தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும், அரசின் சாதனைகளை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்க்க வேண்டும், வாக்காளர்களுக்குத் தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, தேர்தல் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் உரையாற்ற உள்ளார். வருகைப் பதிவு மிக முக்கியம். எத்தனை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்களோ அத்தனை பேரும் நிச்சயமாக வர வேண்டும். அந்தந்த மாவட்டங்களிலிருந்து புறப்படும் போதே அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைத்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தலைவரின் அறிவுரை
நேற்று தலைவர் அவர்களும் நமக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். எவ்விதமான சிறு தவறும் நடந்துவிடக் கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அங்கு 87,000 நிர்வாகிகள் இருப்பார்கள் எனக் கணக்கிட்டுள்ளோம்.
எனவே, ஒரு சிறு விமர்சனத்திற்கோ, தவறுக்கோ நாம் இடமளித்துவிடக் கூடாது. 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு, சேலம் மாநாடு எவ்வாறு ஒரு முன்னுரையாக இருந்ததோ, அதேபோல சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்த நிர்வாகிகள் சந்திப்பு ஒரு அடித்தளமாக இருக்கும் என நம்புகிறோம். ஆகவே, இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நம்முடைய பணிகளை வகுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிர்வாகிகள் சந்திப்பை மற்ற இயக்கங்கள் வியந்து பார்க்கும் அளவிற்குச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.
மிகப்பெரிய வெற்றி
திருவண்ணாமலை சந்திப்பு முடிந்த பிறகு சுமார் ஒரு வாரம் வரை அனைத்து இயக்கங்களும், ஊடகங்களும் அச்சந்திப்பை எவ்வாறு இவ்வளவு சிறப்பாக நடத்தினார்கள், இவ்வளவு இளைஞர்களை எவ்வாறு திரட்டினார்கள், முன்னேற்பாடுகள் எப்படி, இவ்வளவு நேர்த்தியாக இருந்தன என்பதைப் பற்றியே பேசினார்கள். எனவே, இந்த முறை திருவண்ணாமலை சந்திப்பை விடப் மிகப்பெரிய வெற்றியை விருதுநகர் சந்திப்பில் நிகழ்த்திக் காட்ட வேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் மிக மிக அவசியம்.
நம்முடைய தெற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பின் வெற்றி. 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்க வேண்டும். ‘வெல்லுவோம் 200, படைப்போம் வரலாறு” என்றார்.