மிகுந்த மன வேதனை.. சவுதி விபத்தில் இறந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!
சவுதி அரேபியாவின் மதீனா அருகே உம்ரா புனிதப் பயணம் சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து, டீசல் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உறங்கிக்கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததால் உயிரிழப்பு அதிகரித்தது.

சவுதி பேருந்து விபத்து
சவுதி அரேபியாவின் மதீனா அருகே நடந்த பேருந்து விபத்தில், 42 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர்களில் பெண்கள் 20 பேர். குழந்தைகள் 11 பேர் அடங்குவர்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
விஜய் இரங்கல் பதிவு
“தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.”
இவ்வாறு விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து
உம்ரா புனித யாத்திரை மேற்கொண்டிருந்தவர்கள் மெக்காவில் இருந்து மதீனாவிற்கு சென்றபோது பேருந்தும் டீசல் லாரியும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீப்பற்றி எரிந்து நாசமானது.
பல பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது. இதனால், பேருந்தில் தீப்பற்றியதும் உடனடியாக தப்பிக்க முடியவில்லை. இதனால் உயிரிழப்பும் அதிகரித்தது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் இந்த விபத்தில் இறந்துவிட்டனர். மற்றொரு குடும்பத்தில் 5 பேர் இந்த விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். இதனை அவர்களின் உறவினர்கள் உறுதிசெய்துள்ளனர்.