- Home
- இந்தியா
- டெல்லி குண்டுவெடிப்புக்கு கார் வாங்கிக் கொடுத்த நபர் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய என்.ஐ.ஏ!
டெல்லி குண்டுவெடிப்புக்கு கார் வாங்கிக் கொடுத்த நபர் கைது! ஸ்கெட்ச் போட்டு தூக்கிய என்.ஐ.ஏ!
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில், தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் உன் நபியின் முக்கிய கூட்டாளியான அமீர் ரஷீத் அலியை தேசியப் புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.

டெல்லி குண்டு வெடிப்பு
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளிக்கு உமர் உன் நபியின் நெருங்கிய கூட்டாளியை தேசியப் புலனாய்வு முகமை (NIA) கைது செய்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே தற்கொலைப்படை பயங்கரவாதி உமர் உன் நபி நிகழ்த்திய சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறையிடம் இருந்து, தேசியப் புலனாய்வு முகமை (NIA) வசம் மாறியது. என்.ஐ.ஏ இந்த வழக்கில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தியது.
உமர் நபியின் முக்கிய கூட்டாளி கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக, காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற நபரை என்.ஐ.ஏ. டெல்லியில் கைது செய்துள்ளது. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட 'ஹூண்டாய் ஐ20' கார் அமீர் ரஷீத் அலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமீர் ரஷீத் அலி இதற்கு முன்பே ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் காவலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரின் பாம்போர், சம்பூரா பகுதியைச் சேர்ந்த அமீர், இந்தத் தாக்குதலை நடத்துவதற்காக தற்கொலைப் படைத் தீவிரவாதி உமர் உன் நபியுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கார் வாங்க உதவிய அமீர்
"குண்டுவெடிப்புக்கு வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனமாக பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு அமீர், டெல்லிக்கு வந்து உதவியுள்ளார். உயிரிழந்த கார் ஓட்டுநர் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த நபியே என்பதை தடயவியல் ரீதியாக என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியுள்ளது. இவர் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்" என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
விசாரணையின் போது, உயிரிழந்த தீவிரவாதி உமர் உன் நபிக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தை என்.ஐ.ஏ. பறிமுதல் செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் உட்பட 73 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனத்திலும் ஆதாரங்கள் உள்ளதா எனப் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் என்.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உமர் உன் நபியின் வீடு இடிப்பு
டெல்லி காவல்துறை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல்துறை, உத்தரப் பிரதேச காவல்துறை மற்றும் பல்வேறு சகோதர முகமைகளுடன் இணைந்து என்.ஐ.ஏ. தொடர்ந்து பல மாநிலங்களில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள பெரிய சதித்திட்டத்தை அம்பலப்படுத்தவும், இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களைக் கண்டறியவும் பல தடயங்களைத் தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணை செய்து வருகிறது.
முன்னதாக, தற்கொலைப் படைத் தீவிரவாதி உமர் உன் நபியின் சொந்த ஊரான ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் கோயில் பகுதியில் உள்ள அவரது இரண்டு மாடிக் குடும்ப வீடு, இந்த வாரத் தொடக்கத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. உமரின் பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது மனைவி உட்பட பெரும்பாலான குடும்பத்தினர் அந்த வீட்டில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.