- Home
- Tamil Nadu News
- உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் கொடுக்க எண்ணுகிறேன்..! விஜய்க்கு கேவலமாக எழுதித்தரும் உடன் இருக்கும் முட்டாள்கள்
உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் கொடுக்க எண்ணுகிறேன்..! விஜய்க்கு கேவலமாக எழுதித்தரும் உடன் இருக்கும் முட்டாள்கள்
கரூர் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த விஜய் (TVK Vijay), உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார்.

விஜயின் அறிக்கை சர்ச்சை
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் 10 பேர், 16 பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்ததோடு, 65-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த உடனேயே தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த விஜய், "இதயம் நொறுங்கி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கிறேன். நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்வதே கடினமாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.
தவெக தலைவர் விஜய்
பின்னர், இன்று வெளியிட்ட புதிய பதிவிலும் தனது கனிந்த இரங்கலை தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்தார். அவரது பதிவில், "கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
20 லட்சம் கொடுக்க எண்ணுகிறேன்
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் பதிவுக்கு விமர்சனம்
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. விஜய் வெளியிட்ட அறிக்கையில் "உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் கொடுக்க எண்ணுகிறேன்" என்ற வரிகள் குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். “கொடுக்க எண்ணுகிறேன்” என்பது ஒரு தலைவர் பேச வேண்டிய வாக்கியமா? உறுதியுடன் அறிவிக்க வேண்டிய நேரத்தில், இப்படிப் பட்ட சொற்களை பயன்படுத்தியது சரியானதா? என்ற கேள்வி எழுகிறது. ஒரு அரசியல் தலைவரின் குரலில், குறிப்பாக பெருந்துயரத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் தருணத்தில், உறுதியில்லாத, தயக்கம் காட்டும் வார்த்தைகள் மிகவும் பொருத்தமற்றதாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
தவெக விஜயை சுற்றி சர்ச்சை
இதுபோன்ற தவறான வார்த்தைத் தேர்வு, விஜயின் பேச்சுகளை வடிவமைக்கும் குழுவின் திறமையின்மையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்கள் மனதை குழப்பத்தில் ஆழ்த்துவதாகவும் மாறியிருக்கிறது. ஒரு தலைவரின் அறிக்கை என்பது வெறும் பத்திரிகை வெளியீடு அல்ல. அது மக்களின் மனதை தொட்டுச்செல்ல வேண்டிய கருவி ஆகும். சின்ன தவறே பெரிய பிழையாக மாறிவிடும். விஜய்க்கு எழுதித் தரும் குழுவில் அரசியல் நுண்ணறிவு இல்லாதவர்கள் இருப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும், இந்திய அளவில் துயர சம்பவமாக கரூர் மாறியிருக்கும் நிலையில் சீரியசாக எடுத்துக்கொள்ளும் விஷயத்தை ஏன் மெத்தனமாக கையாளுகிறார் விஜய்? என்று பல அடுக்கடுக்கான கேள்விகளும் எழுப்புகிறார்கள் நடுநிலையாளர்கள்.