- Home
- Tamil Nadu News
- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சருக்கு பறந்த முக்கிய கோரிக்கை
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சருக்கு பறந்த முக்கிய கோரிக்கை
தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிடிவி தினகரன், அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம்
தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் முக்கிய கோரிக்கையாக இருப்பது ஓய்வூதியம் தொடர்பானாதாகும். அந்த வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டது. 2025 செப்டம்பர் மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையடுத்து அந்த குழு அரசு ஊழியர்கள் சங்கத்தோடு ஆலோசனையை நடத்தியதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர்கள் போராட்டம்
இது போல பல்வேறு அமைப்புகள், நிதித்துறை அதிகாரிகளிடமும் ஆலோசிதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த குழுவின் பரிந்துரையை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் அடிப்படையில், தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் – அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னையில் அரசு ஊழியர்கள் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாக நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கோரிக்கை
புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் 309வது வாக்குறுதியாக வழங்கிய திமுக, ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கடந்த நிலையிலும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவது கடும் கண்டனத்திற்குரியது. கவன ஈர்ப்பு, அடையாளம், பணி புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், சாலைமறியல் என அனைத்துவிதமான போராட்டங்கள் நடத்தியும்,
செவிசாய்க்காத திமுக அரசால், வேறுவழியின்றி 72 மணிநேரம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் அளவிற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசு அமைத்த குழுவின் கால அவகாசம் வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அக்குழு ஆலோசனை நடத்தியதாகவோ, அரசு ஊழியர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திடுக
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அவற்றை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது போலத் தமிழக அரசு நாடகமாடி வருவது அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயலாகும்.
எனவே, இனியும் குழு அமைக்கிறோம், கருத்துக்களைக் கேட்கிறோம், ஆய்வு செய்கிறோம் எனக் காரணங்களை அடுக்கி காலத்தைத் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.