- Home
- Tamil Nadu News
- இன்றைய TOP 10 செய்திகள்: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... களப்பணியில் டெல்லி முதல்வர்!
இன்றைய TOP 10 செய்திகள்: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... களப்பணியில் டெல்லி முதல்வர்!
திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு, ஐடிஐ மாணவர் ராகிங், வளர்ப்பு நாய் கீறியதால் காவலர் உயிரிழப்பு, தங்கம் விலை உயர்வு, அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட இன்றைய TOP 10 செய்திகள்.

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் 15 நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் ஆற்றிய பணி குறித்து அறிக்கையை தனக்கு அளிக்க வேண்டும் என திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்க விலை
இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, செப்டம்பர் 23 அன்று 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.85,120-ஐ எட்டியது. உலகளாவிய காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஐடிஐ மாணவரை நிர்வாணமாக்கி ராகிங்
மதுரை செக்கானூரணி அரசு கல்லூரி விடுதியில், ஐடிஐ மாணவர் நிர்வாணமாக்கி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலை வீடியோ எடுத்துப் பரப்பிய 3 மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
உண்மையை போட்டு உடைத்த அண்ணாமலை
கூட்டணியில் இருந்து வெளியேறிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியது என்ன என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
“அரசியலில் எப்போதுமே இப்படித்தான்; சின்ன சின்ன மனஸ்தாபங்கள் தேர்தலின்போது மாறும். அண்ணன் ஓபிஎஸையும் சந்திக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். அண்ணன் டிடிவி தினகரன் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். அரசியல் களம் சூடுபிடிக்கும் போது சின்ன சின்ன மனஸ்தாபங்கள் மாறும் என்று நம்புகிறேன். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பனும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
பாம்பை வைத்து மிரட்டி பிச்சை
ரயிலில் ஒரு நபர் கையில் பாம்பை வைத்து மிரட்டி பிச்சை கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக பரவும் வீடியோவில் ஒருவர் பாம்பை கையில் வைத்துக்கொண்டு ரயில் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், பாம்பை கண்டு பயந்த பயணிகள் உடனடியாக அந்த நபருக்கு பிச்சை போடுவதும் என காட்சிகள் பதிவாகி உள்ளன.
அனுமன் பொய்யான கடவுள்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி தலைவர் ஒருவர், டெக்சாஸில் அமைக்கப்பட்டுள்ள 90 அடி உயர ஆஞ்சநேயர் சிலை குறித்து கடும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், இந்தச் சர்ச்சை பதற்றத்தை அதிகரித்துள்ளது.
டெக்சாஸில் உள்ள ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயிலில் கடந்த ஆகஸ்ட் 2024-ல் "Statue of Union" (ஒற்றுமையின் சிலை) எனப் பெயரிடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை திறக்கப்பட்டது. வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுதான்.
பாராசிட்டமால் மாத்திரையால் ஆட்டிசம் பாதிப்பா?
பாராசிட்டமால் மாத்திரைகளைத் தவிர்க்குமாறு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்தை, உலக சுகாதார மையம் (WHO) திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.
H-1B விசா கட்டண உயர்வில் விலக்கு?
அதிபர் டிரம்ப் H-1B விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்தியுள்ளார். இந்த கட்டண உயர்வு மருத்துவத் துறையை பாதிக்கும் என்ற கவலைகளால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க டிரம்ப் அரசு பரிசீலித்து வருகிறது.
நேரடியாக களமிறங்கிய முதல்வர்
தலைநகர் டெல்லியை தூய்மையின் நகராக மாற்ற முயற்சி எடுத்து வரும் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மக்களோடு, மக்களாக இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.
இந்த தூய்மை பணியின்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேகா குப்தா, ''ரிங் ரோட்டில் நாங்கள் ஒரு தூய்மைப் பணியை நடத்தி வருகிறோம். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தூய்மைப் பணியில் பங்கேற்றுள்ளனர். இது தொடர வேண்டும். டெல்லி மக்கள் அனைவரும் சுவர்களில் எழுதுவதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ தவிர்க்க வேண்டும்" என்றார்.
நாயின் நகம் கீறினாலே ரேபிஸ் வரும்
அகமதாபாத் நகரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் வன்ராஜ் மன்ஜாரியா, தனது வளர்ப்பு நாய் கீறியதால் ரேபிஸ் (Rabies) நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்க்கடி மூலமாக மட்டுமே இந்த நோய் பரவும் என்ற தவறான நம்பிக்கையால், அவர் கீறலுக்குப் பிறகு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.