இன்றைய TOP 10 செய்திகள்: சபரிமலையில் ஜனாதிபதி.. களத்தில் உதயநிதி!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலையில் தரிசனம், தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை, சென்னையில் உதயநிதி கள ஆய்வு, காடு வளர்ப்பில் இந்தியா முன்னேற்றம், வைக்கம் விருது அறிவிப்பு உள்ளிடவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.

சபரிமலையில் குடியரசுத் தலைவர் தரிசனம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலைக்கு வருகை தந்து தரிசனம் செய்தார். இருமுடி கட்டி பதினெட்டாம் படியேறி ஐயப்பன் தரிசனத்தை நிறைவு செய்துள்ளார். சந்நிதானம் வந்தடைந்த குடியரசுத் தலைவரை கொடிமரத்தின் அருகே தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பூரணகும்பம் அளித்து வரவேற்றார்.
முன்னதாக, காலை ஒன்பது மணியளவில் கோன்னி பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் ஹெலிகாப்டர் தரையிறங்கி, சாலை மார்க்கமாக பம்பைக்குச் சென்றார்.
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாளை (அக்டோபர் 23) தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பள்ளிகள், அங்கன்வாடிகள் செயல்படாது என்று அவர் கூறியுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்ட உதயநிதி
தொடர் கனமழை எதிரொலியாக சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “வடகிழக்குப் பருவமழை நேரத்தில் மக்களுக்கு துணை நிற்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் இன்றைய தினம் காலை ஆய்வு செய்தோம்.
Helpline, சமூக வலைத்தள பக்கங்களில் மழைத்தொடர்பாக உதவிகள் கேட்டு கோரிக்கை விடுத்த பொதுமக்களிடம் பேசினோம். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்வபெருந்தகை ஆதங்கம்
என்னிடம் கேட்காமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது ஏன்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கோபத்தை வெளிப்படுத்தினார். அதிகாரிகள் அரசை நடத்துவதாக குற்றம்சாட்டினார்.
காடு வளர்ப்பில் முன்னேறிய இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உலகளாவிய வன வள மதிப்பீடு 2025 (Global Forest Resources Assessment 2025) அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் தரவரிசை 10-வது இடத்தில் இருந்த இந்தியா 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், வனப்பரப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்திய மாநில வன அறிக்கையின்படி, நாட்டின் பசுமைப் பரப்பு அதிகரித்தாலும், அடர்ந்த காடுகளின் தரம் குறைந்து வருவது கவலையளிக்கிறது.
களத்தில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் தாமதமாவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, விவசாயிகளின் துயர் துடைக்க வலியுறுத்தினார்.
வைக்கம் விருது அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதை அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜனுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவிலும் உலக அளவிலும் சாதி பாகுபாட்டிற்கு எதிராக ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
சமூக நீதிக்கான வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் வைக்கம் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தார். பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்ட ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு இந்த விருது அளிப்பபடுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான வைக்கம் விருது கன்னட எழுத்தாளரும் சமூக செயல்பாட்டாளருமான தேவநூர மஹாதேவாவுக்கு வழங்கப்பட்டது.
ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு
உலகிலேயே கொசுக்கள் இல்லாத நாடாக இருந்த ஐஸ்லாந்தில், முதல் முறையாக 'குலிசெட்டா அன்யூலேட்டா' வகை கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. கப்பல்கள் அல்லது சரக்குகள் மூலம் இவை வந்திருக்கலாம் என்றும், காலநிலை மாற்றம் இதற்குக் காரணம் அல்ல என்றும் கூறப்படுகிறது.
தீபாவளி பட்டாசு விற்பனை
சிவகாசியின் புகழ்பெற்ற பட்டாசுத் தொழில் இந்த தீபாவளியில் சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான விற்பனையைப் பதிவு செய்துள்ளது . ஆனால் டெல்லி- என்.சி.ஆர் பகுதியில் பட்டாசுகள் மீதான முழுமையான தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் வருவாய் அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால்...
செங்கல்பட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் இருப்பதால் தான் தங்கள் மீது விமர்சனங்கள் வருவதாகக் கூறினார். கூட்டணியை விட்டு விலகினால் அந்த விமர்சனங்கள் தானாகவே நீங்கிவிடும் என்றும் தெரிவித்தார். பாஜக எதிர்ப்பு நிலைப்பாடே தங்களை இலக்கு வைக்க உண்மையான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.