ஆப்கானிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளைப் புதுப்பிக்கும் விதமாக, காபூலில் உள்ள தனது தொழில்நுட்பப் பிரிவை முழுமையான தூதரகமாக இந்திய அரசு தரம் உயர்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அமைச்சர் இந்தியா வந்திருந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளைப் புதுப்பிக்கும் வகையில், காபூலில் உள்ள இந்தியாவின் தொழில்நுட்பப் பிரிவு (Technical Mission) முழுமையான தூதரகமாகத் (Embassy) தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தத் தூதரகம் அமைக்கும் நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் (MEA) செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் தாலிபன் பயங்கரவாதிகள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா மீண்டும் உறவாடத் தொடங்கியுள்ளது.

வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

“ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் இந்தியா வந்தபோது அறிவிக்கப்பட்ட முடிவுக்கு ஏற்ப, காபூலில் உள்ள இந்தியத் தொழில்நுட்பப் பிரிவின் நிலை, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகமாக மாற்றப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் புதுடெல்லியில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காபூலில் உள்ள இந்தியப் பிரிவின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அவர்களின் விவாதத்தின் முக்கிய அம்சமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபன் அரசின் வாக்குறுதி

இந்த மாதம் இந்தியாவில் ஆறு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முத்தகி, இருநாட்டு உறவுகளில் ஒரு புதிய அணுகுமுறையின் தொடக்கமாக அமைந்தது. இருப்பினும் தாலிபான் அமைப்பை இந்தியா இன்னும் அங்கீகரிக்கவில்லை.

எந்த சக்தியும் ஆப்கானிஸ்தானை இந்தியாவின் நலன்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தாலிபன் அரசு அனுமதிக்காது என்று முத்தகி கூறியிருந்தார்.