இன்றைய TOP 10 செய்திகள்: மழை விடுமுறை முதல் மது விற்பனை வரை!
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தீபாவளி மது விற்பனை புதிய சாதனை, ஜப்பானுக்கு முதல் பெண் பிரதமர், அமெரிக்க H-1B விசா கட்டணத்தில் விதிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இன்றைய TOP 10 செய்தித் தொகுப்பில் பதிவாகியுள்ளன.

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இத்தனை கோடிக்கு மது விற்பனையா?
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு ரூ.600 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கையும் தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மண்டல வாரியாக, மதுரை மண்டலம் முதலிடம்.
அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும்
தீபாவளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘குடிமக்கள் கூட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும். அனைவரும் உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். பாரதம் என்ற உணர்வை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும். தூய்மையைப் பராமரிக்க வேண்டும்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கு குட் நியூஸ்
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) H-1B விசா கட்டண உயர்வு குறித்து முக்கிய விளக்கம் அளித்துள்ளது. படிக்கும் மாணவர்கள் மற்றும் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டுள்ளதால் சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
50 ஓவர் ஸ்பின் பவுலிங்
பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வீசி புதிய உலக சாதனை படைத்தது. இந்த போட்டியில் 213 ரன்கள் என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ், சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
அரைகுறை ஆடையில் ஈரான் அதிகாரியின் மகள்
ஈரானில் பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம் என்ற இஸ்லாமிய மதச் சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி காமேனியின் மூத்த பாதுகாப்பு அதிகாரியின் மகள் திருமண வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்த வீடியோ ஹிஜாப் சட்டத்தில் ஈரானின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மகளிர் உதவித்தொகை பெற்ற 12,431 ஆண்கள்!
மகாராஷ்டிரா அரசின் ‘லாட்கி பாஹின் யோஜனா' என்ற மகளிர் நலத் திட்டத்தில் 12,431 ஆண்கள் உட்பட ஆயிரக்கணக்கான தகுதியற்றவர்கள் பலன் அடைந்து வந்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ரூ.164 கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்துள்ளது.
ஜப்பானில் முதல் பெண் பிரதமர்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாயிச்சி தேர்ந்தெடுக்கப்பட்ட்டுள்ளார். சீனக் கொள்கைகளின் கடுமையான எதிர்ப்பாளருமான டகாயிச்சி, கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்ததன் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
சனே டகாயிச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானின் ஐந்தாவது பிரதமராகத் தேர்வாகியுள்ளார். மைனாரிட்டி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் இவருக்கு அடுத்த வாரம் நிகழவுள்ள அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப்பின் வருகை உட்பட பல சவால்கள் காத்திருக்கின்றன.
பிரக்யாவின் சர்ச்சை பேச்சு
முன்னாள் போபால் நாடாளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர், பெற்றோர் தங்கள் மகள்களை இந்து அல்லாதவர்களின் வீட்டிற்குச் செல்லாமல் தடுக்க வேண்டும் என்றும், மீறிச் சென்றால் அவர்களது கால்களை உடைக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். பிரக்யாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் போபாலில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் பேசிய தாக்கூர், பெற்றோர் தங்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மகள்களை அடித்துத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.