இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் தாக்குதல் வரம்பு 800 கி.மீ-ஆக உயர்த்தப்பட்டு, 2027-ஆம் ஆண்டுக்குள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ரேம்ஜெட் எஞ்சினுடன் கூடிய இந்த புதிய ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கியப் பங்காற்றி வரும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை 800 கி.மீ-ஆக உயர்த்தும் மேம்பாட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த புதிய ரக ஏவுகணையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், அதாவது 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரம்மோஸ் ஏவுகணை

இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு வலிமையின் முக்கியத் தூணாக உள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேசன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன.

3,000 கிலோ எடைகொண்ட பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியைவிட 3.5 மடங்கு வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது. இது 300 கிலோ வெடிகுண்டுகளைச் சுமந்து செல்லும் வலிமை படைத்தது. தற்போது பயன்பாட்டில் உள்ள பிரம்மோஸ் ஏவுகணை 500 கி.மீ வரையிலான இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

800 கி.மீ. தொலைவுக்கான சோதனை

பிரம்மோஸ் ஏவுகணையின் வேகம், சீறிப்பாயும் தொலைவுகளை மேம்படுத்தும் பணிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 800 கி.மீ தொலைவு தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையின் சோதனை பல மாதங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்புத் துறை வட்டாரங்களின் தகவலின்படி, மாற்றியமைக்கப்பட்ட ரேம்ஜெட் எந்திரம் (Ramjet Engine) மற்றும் பிற மேம்படுத்தல்களுடன் கூடிய புதிய 800 கி.மீ நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காகச் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ராணுவம் மற்றும் கடற்படையில் முதன்மை

புதிய 800 கி.மீ தாக்குதல் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணைகள் முதற்கட்டமாக கடற்படை மற்றும் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும், விமானப்படையில் சேர்க்கப்படுவதற்குச் சற்று அதிக காலம் எடுக்கும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், பிரம்மோஸ் ஏவுகணையின் எடையைக் குறைப்பது, தாக்குதல் தூரத்தை அதிகரிப்பது, விமானத்தில் இருந்து ஏவுவதற்காகச் சிறிய ரகங்களை உருவாக்குவது போன்ற மேம்பட்ட புதிய மாடல்களைக் கூட்டாகத் தயாரிப்பதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், ஏவுகணையின் தாக்குதல் திறனைப் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.