இன்றைய TOP 10 செய்திகள்: தவெக வழக்கில் டிவிஸ்ட்.. தீபாவளிக்கு மறுநாளும் லீவு!
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனி ஆணையம், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சித்த அமைச்சர், தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டம் உள்ளிட்டவை இன்றைய TOP 10 செய்திகளில் உள்ளன.

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளிக்கு மறுநாள் 22ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசைச் சாடிய தங்கப் தென்னரசு
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளையும் தர மறுப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
துணை மானியக் கோரிக்கை விவாதத்தின் பதிலுரையில் பேசிய தங்கம் தென்னரசு, ''2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிற்குக் கொடுத்திருக்கக்கூடிய வரிப் பங்களிப்பு 7.5 இலட்சம் கோடி ரூபாய். இந்த 7.5 இலட்சம் கோடி ரூபாய் நாம் கொடுத்துவிட்டு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக 2.85 இலட்சம் கோடி ரூபாய் மட்டுமே நமக்கு நிதிப் பகிர்வாக வந்திருக்கிறது. அதே வேளையில் உத்தரபிரதேசம் ரூ.3.07 லட்சம் கொடுத்துள்ளது. அந்த மாநிலத்துக்கு 3 மடங்கு அதிகமாக ரூ.10.60 லட்சம் கோடியை மத்திய அரசு அள்ளிக் கொடுத்துள்ளது'' என்று தெரிவித்தார்.
ஆணவ படுகொ**களை தடுக்க தனி ஆணையம்
தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்துக்கான பரிந்துரை வழங்குவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாதி பெயரை நீக்க இடைக்காலத் தடை
தெருக்கள், சாலைகள் மற்றும் ஊர்ப்பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், அரசாணையின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக பலியாயினர். இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து முழுமையாக விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றம் சென்றது.
திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா
‘‘கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க… எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்க’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘‘ கிட்னி முறைகேடு குறித்து நான் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு சாரியான பதில் கிடைக்கவில்லை.
மீண்டும் போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்
சென்னையில் மீண்டும் போராட்டத்தில் களமிறங்கிய தூய்மை பணியாளர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். சட்டப்பேரவை கூட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒதுக்கியதால் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் குறைந்த ஊதியம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. ஆகவே தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து சென்னையில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கட்டட விதிகள் திருத்தி அறிவிப்பு
தனி வீடுகளுக்கு வாகன நிறுத்துமிடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள வீடுகளில், 4 கார் நிறுத்துமிடம், 4 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும் எனவும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில், இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது எனவும் தமிழக அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா!
குஜராத்தின் புதிய அமைச்சரவையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா இடம்பெற்றுள்ளார். ஜாம்நகர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர், இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்ற 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சித் தலைமை அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி, முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர மற்ற அனைத்து குஜராத் அமைச்சர்களும் நேற்று (வியாழக்கிழமை) தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அன்புமணி தான் உண்மையான பாமக?
பாமக தற்போது தந்தை, மகன் என இரு அணியாக செயல்படும் நிலையில் பாரதிய ஜனதாகட்சியின் தேசியத் துணைத் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளருமான வைஜயந்த் பாண்டா எம்.பி. சென்னை பனையூரில் அமைந்துள்ள அலுவலகத்தில் அன்புமணியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.