- Home
- Tamil Nadu News
- Tamilnadu Weather : கார்த்திகை தீபத்தன்று தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! 9 மாவட்டங்களுக்கு அலர்ட்... லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா?
Tamilnadu Weather : கார்த்திகை தீபத்தன்று தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை! 9 மாவட்டங்களுக்கு அலர்ட்... லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா?
Tamil Nadu Weather Update : கார்த்திகை தீபத் திருநாளான இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

இன்றைய வானிலை நிலவரம்
தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 24) கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் வீடுகள் தோறும் அகல் விளக்குகள் ஏற்றி மக்கள் இறைவனை வழிபடுவார்கள். குறிப்பாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் மகா தீபத் திருவிழாவைக் காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இத்தகைய கொண்டாட்டங்களுக்கு மத்தியில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று 9 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு என்ன காரணம்?
வானிலை மாற்றம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் முதல் மத்தியமேற்கு வங்கக்கடல் வரையிலான பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியுடன் தொடர்புடைய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதேபோல், வடக்கு கேரளா முதல் கர்நாடகா வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சுமார் 0.9 கி.மீ உயரத்தில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் காணப்படுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
நவம்பர் 24-ம் தேதியான இன்று கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதே எச்சரிக்கை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், திண்டுக்கல், அரியலூர், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானிலை எப்படி இருக்கும்?
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்சமாக 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.















