இன்றோடு ஓராண்டு... ஜாமினுக்காக சிறையில் ஏங்கி தவிக்கும் செந்தில் பாலாஜி- அரசியலில் கடந்த வந்த பாதை என்ன.?
அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி, அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பல கட்ட, பல ஆண்டு விசாரணைக்கு பிறகு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி இதே நாள் கைது செய்தது. கைது செய்யப்பட்டு இன்றோடு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் எப்போது ஜாமின் கிடைக்கும் என வழி மேல் விழி வைத்து காத்துள்ளார் செந்தில் பாலாஜி..
யார் இந்த செந்தில் பாலாஜி
யார் இந்த செந்தில் பாலாஜி.. அவருடையை அரசியல் பயணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..
கரூர் மாவட்டத்தில் ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த வி. செந்தில்குமார் தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார். 1994ஆம் ஆண்டு மதிமுக-வில் அரசியல் பயணத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி 1996ல் திமுக-வில் இணைந்தார். ஆனால் அங்கு தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் 2000ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் அசூர பலத்தில் செந்தில் பாலாஜி
அதிமுகவில் சேர்ந்த சிறிது நாட்களிலேயே பல பொறுப்புகள் அடுத்தடுத்து வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என தனது அரசியல் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே சென்றார். இதனையடுத்து 2006, 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
யார் இந்த செந்தில் பாலாஜி..? அரசியலில் நுழைந்து அமைச்சரானது எப்படி.? கடந்து வந்த பாதை...
டிடிவி தினகரனோடு மோதல்
எப்படி திடீரென உச்சத்திற்கு சென்றாரோ அதே போல2015ஆம் ஆண்டு முதல் அரசியல் வாழ்க்கை சறுக்கியது. அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார்.
இதனையடுத்து மீண்டும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற நேரத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அதிமுக உட்கட்சி மோதலால் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவர், தினகரனோடு ஏற்பட்ட மோதலால் திமுகவிற்கு ஜம்ப் அடித்தார்.
senthil balaji stalin
அதிமுக டூ திமுக
திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு திமுக தலைமையோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அடுத்த சில மாதங்களிலையே திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், முக்கிய அதிகார மிக்க நபராக திகழ்ந்தார். கொங்கு மண்டலத்தில் வீழ்ந்து கிடந்த திமுகவை தூக்கி உயர்த்த பாடுபட்டார்.
அந்த நேரத்தில் தான் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வெற்று முக்கிய துறையான மின்சாரத்துறையை கைப்பற்றினார். இரண்டு வருடங்கள் அமைச்சராக தொடர்ந்தவரை 10 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் திடீரென கைது செய்தது அமலாக்கத்துறை,
அமலாக்கத்துறையால் கைது
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டவர் ஜாமின் கோரி பல முறை மனு தாக்கல் செய்தார். ஆனால் கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமின் வழங்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எப்போது ஜாமின் கிடைக்கும்.?
இன்றோடு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், எப்போது ஜாமின் கிடைக்கும், மீண்டும் எப்போது அரசியல் களத்திற்கு செந்தில் பாலாஜி திரும்புவார் என அவரது ஆதரவாளர்கள் காத்துள்ளனர்.