தமிழகத்தில் இனி மின்தடை இருக்கக் கூடாது.! வெளியான மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் நடைபெறுவதால், தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க TNEB உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டது என்றால் ஏசி உள்ளிட்ட மின்பயன்பாடு அதிகரிக்கும். இதனால் அதிக மின் தேவை ஏற்படுவதால் பல இடங்களில் மின் தடை ஏற்படும். எனவே கோடை காலங்களில் மின் தடை இருக்க கூடாது என தமிழக மின் வாரியம் சார்பாக பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல முறை ஆலோசனை கூட்டங்கள் நடத்தி கூடுதல் மின் உற்பத்தி திட்டங்களும், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்காகவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு தற்போது தொடங்கியுள்ளது.
பள்ளி தேர்வுகள் தொடக்கம்- மின் தடை இருக்காது
எனவே மின் தடை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில்; பள்ளி மாணவர்களுக்கான சிபிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து தேர்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தயார் நிலையில் களப்பணியாளர்கள்
எனவே தேர்வு மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின் மாற்றியை தொடர்ந்து கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும் எனவும், இது மட்டுமில்லாமல் பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளர் ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு 5 மையங்களுக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தலைமையாசிரியர்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்ளும் வகையில் துறை சார்ந்த பணியாளர், அதிகாரிகளின் எண்களை அவர்களிடம் வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரவு நேரத்திலும் மின் தடை இருக்க கூடாது
தேர்வு நடைபெறும் நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது எனவும், மாணவர்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில் இரவு நேரங்களிலும் மின்தடை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது தொடர்பாக நாள்தோறும் மண்டல தலைமைப் பொறியாளர்கள் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.