நெல்லையில் அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம்: நடத்துநருக்கு ரூ.12,000 அபராதம்
நெல்லை - நாங்குநேரி இடையே அரசுப் பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநருக்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் ரூ.12000 அபராதம் விதித்துள்ளது. நடத்துநர் ரூ.4 கூடுதலாக வசூலித்ததால், பயணிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம்
நெல்லை - நாங்குநேரி இடையே அரசுப் பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துநருக்கு, நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
நாங்குநேரி சன்னதி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கண்ணன் மற்றும் நாங்குநேரி காமராஜ் தெருவைச் சேர்ந்த கைலாசம் பார்வதிநாதன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாங்குநேரிக்குச் செல்ல அரசுப் பேருந்தில் ஏறினர். அப்போது நடத்துநர், இருவருக்கும் சேர்த்து ரூ.50 டிக்கெட் கட்டணமாக வசூலித்துள்ளார்.
நாங்குநேரி பேருந்து
பேருந்து நாங்குநேரி பைபாஸ் சாலையில் சென்றபோது, நடத்துநர் அந்தப் பேருந்து நாங்குநேரி பேருந்து நிலையத்துக்குச் செல்லாது என்றும், பைபாஸ் வழியாக நாகர்கோவிலுக்கு நேரடியாகச் செல்லும் என்றும் கூறி, இருவரையும் இறங்குமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் நடத்துநரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். நடத்துநர் மறுக்கவே, பயணிகள் இருவரும் உடனடியாக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
கூடுதல் கட்டணம் வசூல்
அலுவலகத்தில் பேசிய ஊழியர், நாங்குநேரி ஊருக்குள் சென்று பேருந்து நிலையத்தில் இருவரையும் இறக்கி விடுமாறு நடத்துநருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னர் பேருந்து நாங்குநேரி பேருந்து நிலையம் சென்று இருவரையும் இறக்கி விட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது, நெல்லையில் இருந்து நாங்குநேரி பேருந்து நிலையத்துக்கு ஒருவருக்கு ரூ.23 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், நடத்துநர் ஒருவருக்கு ரூ.25 வீதம், இருவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.50 வசூல் செய்துள்ளார். அதாவது, அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட ரூ.4 அதிகமாக வசூலித்துள்ளார்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
இதனால் பாதிக்கப்பட்ட கண்ணன் மற்றும் பார்வதிநாதன் ஆகிய இருவரும், தங்கள் வழக்கறிஞர் மூலம் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் விசாரித்தனர்.
நடத்துநருக்கு அபராதம்
விசாரணையின் முடிவில், இரு பயணிகளுக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.7 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவு ரூ.5 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.12 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட நடத்துநர் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பு, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் போக்குக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.