- Home
- Tamil Nadu News
- பணம் கொடுத்தா தான் நடத்துவேன்னு சொல்ல நீங்க என்ன மேஸ்திரியா..? RTE விவகாரத்தில் டென்ஷனான அன்புமணி
பணம் கொடுத்தா தான் நடத்துவேன்னு சொல்ல நீங்க என்ன மேஸ்திரியா..? RTE விவகாரத்தில் டென்ஷனான அன்புமணி
கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கை: இதுவரை பள்ளிகளில் சேராத மாணவர்களின் கல்விக்கு என்ன செய்யப்போகிறது திமுக அரசு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% ஒதுக்கீடு
கல்வி பெறும் உரிமைச்சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை நடைமுறை வரும் 6-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசின் கல்வித்துறை அறிவித்திருக்கிறது. பருவத்தே பயிர் செய்யத் தவறிய தமிழக அரசின் பொறுப்பற்ற செயலால் ஏழைகளிலும் ஏழைகளான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இடங்கள் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தப் பிரிவில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே செலுத்திவிடும் என்பதால் அக்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கிடைக்கிறது. இந்த இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெறும். மத்திய அரசு நிதி ஒதுக்காததைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இந்த மாணவர் சேர்க்கையை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்ததால் பள்ளியில் சேர வசதியில்லாத பல்லாயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பள்ளியில் சேரவில்லை.
ஏழை எளிய மாணவர்களின் கல்வி பாதிப்பு
இந்த நேரத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், மாணவர் சேர்க்கைக்காக அரசு அறிவித்திருக்கும் விதிமுறைகள் அபத்தமாக உள்ளன. அதன்படி, இதுவரை பள்ளிகளில் சேராத எந்த மாணவரும் புதிதாக விண்ணப்பித்து தனியார் பள்ளிகளில் சேர முடியாது. மாறாக, ஏற்கனவே சேர்ந்த மாணவர்களில் கல்வி பெறும் உரிமைச் சட்டப்படியான மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றவர்கள் இருந்தால், அவர்கள் செலுத்தியக் கல்விக் கட்டணம் திருப்பித் தரப்படுமாம். அவர்களின் எண்ணிக்கையும் 25%க்கும் கூடுதலாக இருந்தால், முதல் 25 விழுக்காட்டினருக்கு மட்டும் தான் வழங்கப்படுமாம்; மற்றவர்களுக்கு வழங்கப்படாதாம். தமிழக அரசின் விதிகள் அநீதியானவை.
கல்வி பெறும் உரிமைச் சட்டப்படி கடந்த ஏப்ரல் மாதம் மாணவர் சேர்க்கைத் தொடங்காத நிலையில், அந்த சட்டத்தின்படி தங்கள் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை இடங்களில் இலவசமாக சேரலாம் என காத்திருந்த மாணவர்களில் பெரும்பான்மையினர் எந்த பள்ளிகளிலும் சேரவில்லை. மீதமுள்ள மாணவர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள சிறந்த பள்ளிகளில் சேர முடியாமல், குறைந்த கட்டணம் வசூலிக்கும் சாதாரண பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை தொடங்கியும் பயனில்லை
இப்போது மாணவர் சேர்க்கை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு வகுத்திருக்கும் விதிகளின்படி இதுவரை பள்ளியில் சேராத மாணவர்களால் இனியும் சேர முடியாது; வேறு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களால் தங்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாறவும் முடியாது. அப்படியானால், மாணவர் சேர்க்கையை இப்போது தொடங்கியும் பயனில்லை.
தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல
மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும், மாநில அரசு அதன் சொந்த நிதியில் கல்வி பெறும் உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கையை நடத்தி, நீதிமன்றத்தின் வாயிலாகவோ, அரசியல் அழுத்தத்தின் காரணமாகவோ மத்திய அரசிடம் நிதியை பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசு நிதி கொடுத்தால் தான் மாணவர் சேர்க்கை நடத்துவோம் என்று கூறுவதற்கு தமிழக அரசு ஒன்றும் மேஸ்திரி அல்ல... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மக்களின் நலன்களை காக்கும் பொறுப்பு அதற்கு உள்ளது. அதை செய்யத் தவறியதால் பல்லாயிரம் மாணவர்கள் நடப்பாண்டில் பள்ளிகளில் சேர முடியவில்லை. அவர்களின் கல்விக்கு விளம்பர மாடல் அரசு என்ன செய்யப் போகிறது?
விதிகளில் மாற்றம் வேண்டும்
நடப்புக் கல்வியாண்டில் இதுவரை எந்தப் பள்ளிகளிலும் சேராத, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி பயனடைய தகுதி கொள்ள குழந்தைகளை அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர அனுமதிக்க வேண்டும். அதேபோல், ஏற்கனவே பணம் கட்டி சேர்ந்த குழந்தைகளுக்கு கட்டணத்தைத் திருப்பி தருவதுடன், அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள அவர்கள் விரும்பும் பள்ளிகளில் சேர வகை செய்ய வேண்டும். அதற்கேற்ற வகையில் நடப்பாண்டிற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.