EPS vs OPS:தொடர் தோல்வி.! விரக்தியில் தொண்டர்கள்.. ஒன்றிணைய இறங்கி வருவாரா எடப்பாடி.?அடுத்த நடக்கப்போவது என்ன?
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களும் தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது. இதன் காரணமாக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், அதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவு- அதிமுகவில் தொடரும் குழப்பம்
தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும், அதிக வாக்கு சதவிகிதம் கொண்ட கட்சியாக இருந்த அதிமுக அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து வருவது அக்கட்சி தொண்டர்களை விரக்தி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு நடைபெற்ற ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்,
sasikala
தொடர் தோல்வி- தொண்டர்கள் விரக்தி
உள்ளாட்சி தேர்தல், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், விடுபட்ட இடங்களுக்கான மாநகாராட்சி தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தல் என தொடர் தோல்விகளால் அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
தொடரும் திமுகவின் வெற்றி
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கம், அடுத்தது ஓபிஎஸ் நீக்கம் என உட்கட்சி மோதலால் பல பிளவுகளாக அதிமுக பிரிந்து கிடக்கிறது. இதனால் தொண்டர்களும் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் வாக்குகள் சிதறி வருகிறது. ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் திமுகவின் வெற்றியானது தொடர்ந்து வருகிறது.
கத்தை குச்சியை முறிப்பது கடினம்
இந்தநிலையில் மீண்டும் அதிமுக ஒன்றுபட வேண்டும் அப்போது தான் எதிரிகளை எதிர்கொள்ள முடியும் என்ற முழக்கம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்." இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும்
மாண்புமிகு நம் அம்மா அவர்கள் உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதே போல சசிகலாவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறியிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த ஒன்றிணைப்பு முடிவிற்கு இறங்கி வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இறங்கி வருவாரா எடப்பாடி.?
ஆனால் வாக்குகள் பிரிவது அதிமுகவிற்கு நல்லதல்ல, தொண்டர்களும் விரக்தி அடைவார்கள் என கூறப்பட்டு வருகிறநு . தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவானது திமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும் மீண்டும் மோடி வரக்கூடாது என்பதற்காக பதிவு செய்யப்பட்ட வாக்குகளாக பார்க்கப்படுகிறது. எனவே அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என அடுத்தகட்டமாக பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
EPS OPS
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருப்பதால் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் பிடிக்க அதிமுகவை பலப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஓ.பன்னீர் செல்வமும் எந்த வித தியாகத்திற்கும் தயார் என அறிவித்துள்ளார். எனவை தனது ஒருங்கிணைப்பாளர் என்ற பிடிவாதத்தில் இறங்கி வந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் முடிவு என்ன என்பதே தற்போதைய கேள்வியாக எழுந்துள்ளது.