ஒரே நாளில் சென்னையை காலி செய்த மக்கள்.! இத்தனை லட்சம் பேர் வெளியூர் பயணமா.?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்கள் மூலம் பல லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
வேலைக்காக வெளியூர் பயணம்
தொழில் துறையின் வளர்ச்சியின் காரணமாகவும், வேலைக்காகவும், படிப்பிற்காகவும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலை தேடி லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் வெளியூருக்கு பயணம் செய்கிறார்கள். சொந்த ஊரை விட்டும், உறவினர்களை விட்டும் தெரியாத இடத்தில் தங்களது வாழ்நாளை கழித்து வருகிறார்கள்.
தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள். அந்த வகையில் இந்ததாண்டு தீபாவளியானது வியாழக்கிழமை வந்தது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை கிடைத்தால் அடுத்ததாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்த்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
சிறப்பு ரயில் பேருந்து இயக்கம்
அந்த வகையில் தமிழக அரசும் நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையை அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக இன்ப மகிழ்சி அடைந்த மக்கள் வெளியூர் பயணத்திற்கு தயாரானார்கள். ரயில் மற்றும் பேருந்துகளில் தங்களது பயணத்தை திட்டமிட்டனர். ரயில்வே துறை சார்பாக நுற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பாகவும் 14ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் தனியார் ஆம்னி பேருந்து, சொந்த கார்கள் மூலம் பல லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
koyambedu
காலியான சென்னை
இதன் காரணமாக சென்னை நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக உள்ளது. சென்னையின் இதய பகுதியாக பார்க்கப்படும் அண்ணாசாலை சிக்னல் ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்களின் நெரிசல் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்லும் வகையில் வெறிச்சோடி உள்ளது. இந்தநிலையில் சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் வெளியூர் பயணம் செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பேருந்தில் இத்தனை லட்சம் பேர் பயணமா.?
அதன் படி, போக்குவரத்து துறையின் சார்பில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் இன்று (30.10.2024) நள்ளிரவு 12 .00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2092 பேருந்துகளும், 2172 சிறப்பு பேருந்துகளும் ஆக கடந்த (28.10.2024 முதல் 30.10.2024) நேற்று நள்ளிரவு 12 .00 மணி வரையில் மொத்தம் 10,784 பேருந்துகளில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 358 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 1,50,510 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே போல ரயில்கள், ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்கள் மூலமாகவும் 10 முதல் 20 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.