- Home
- Tamil Nadu News
- இந்த காலத்துல இப்படியோரு டாக்டரா? யார் இந்த ரத்தினம்? ஊரே கதறும் அளவுக்கு அப்படி என்ன செய்தார்?
இந்த காலத்துல இப்படியோரு டாக்டரா? யார் இந்த ரத்தினம்? ஊரே கதறும் அளவுக்கு அப்படி என்ன செய்தார்?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 96 வயதான மருத்துவர் ரத்தினம் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்தவர் ரத்தினம்(96). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மருத்துவராக பணியாற்றி வருகின்றனர்.
மகப்பேறு மருத்துவர்
இந்நிலையில் 1929-ல் பிறந்த ரத்தினம் 1959-ல் மருத்துவர் பணியைத் தொடங்கினார் ரத்தினம். மகப்பேறு மருத்துவரான இவர் முதலில் ரூ. 2-க்கு மருத்துவம் பார்த்தார். 1997ம் ஆண்டிலிருந்து 5 ரூபாயும், 2007ம் ஆண்டிலிருந்து 10 ரூபாய் கட்டணமாக பெற்று வந்தார். இதனால் பட்டுக்கோட்டை பகுதியில் பத்து ரூபாய் மருத்துவர் என மக்கள் மத்தியில் அன்பாக அழைக்கப்பட்டு மிகவும் பிரபலமானார். இவர் மணிக்கூண்டு பெரியத்தெருவில் TAK என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்தார். கடைசி வரை கட்டணத்தை உயர்த்தாமல் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.
வயதுமூப்பு காரணமாக மறைவு
இந்நிலையில், வயதுமூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் மருத்துவர் ரத்தினம் நேற்று உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் கண்ணீரடன் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மருத்துவர் ரத்தினத்தின் மறைவு பட்டுக்கோட்டை மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை எற்படுத்தியுள்ளது. அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
டிடிவி.தினகரன் இரங்கல்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் திரு.ரத்தினம்பிள்ளை அவர்கள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் என அனைவராலும் போற்றப்பட்ட திரு.ரத்தினம்பிள்ளை அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.