பழைய ஓய்வூதிய திட்டம்! வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய ஆசிரியர்கள்! கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
2003க்குப் பின் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமலானதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
jayalalitha
கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு எதிராக ஜெயலலிதா அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்தார். தமிழக அரசின் வருமானத்தில் பெரும் பங்கு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு மட்டுமே செல்கிறது எனும் உண்மையை முதன் முதலில் அம்பலப்படுத்தியது ஜெயலலிதா தான். இதனையடுத்து, தமிழகத்தில் 2003ம் ஆண்டுக்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.
Government Employee
இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட பல்வேறு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா போன்றே அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதனையடுத்து, அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இதனை முன்வைத்து வந்தனர்.
DMK Government
திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தனர். இதனை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்தனர். ஆனால் ஆட்சிக்கு மூன்றரை ஆண்டுகளாகியும் இதுதொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
chennai high court
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஆர்.ரமேஷ், சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் யுவகுமார், தேவராஜூலு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஆசிரியர் ஆர்.ரமேஷ் சிறுபான்மை மொழிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு 2001-ம் ஆண்டு முடிவு எடுத்து, 2003-ம் ஆண்டு தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்று தெலுங்கு மொழி ஆசிரியராக 21-8-2003 அன்று நியமனம் செய்யப்பட்டேன்.
old pension scheme
இந்த சூழலில், தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை 1-4-2003 அன்று முதல், அதாவது முன்தேதியிட்டு ரத்து செய்து அதே ஆண்டு ஆகஸ்டு 6-ந் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. இதனால், என் பெயர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இருக்கிறது. ஆனால், இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே தேர்வு நடவடிக்கை தொடங்கி விட்டது. எனவே என் பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்தும் அரசு பரிசீலிக்கவே இல்லை இவ்வாறு கூறியிருந்தார்.
Tamilnadu Government
இதேபோல, சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் யுவகுமார், தேவராஜூலு ஆகியோரும் இதேபோல் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி இதுபோன்ற ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை சேர்க்கவேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு இந்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி மனுதாரர்களின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 2 வாரத்துக்குள் முடிவை அரசு எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.