அப்பாடா! நிம்மதி பெருமூச்சு விடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! என்ன காரணம்?
தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளத்தில் வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எமிஸ்
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. அதேபோல் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும் வகையில் 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
களஞ்சியம் செயலி
விடுப்பு, சரண்டர் விடுப்பு, பே சிலிப் பதிவிறக்கம், பி.எப்., டிரான்ஸ்பர் ஜாயினிங் என்ட்ரி, இ சலான் உள்ளிட்ட பணப் பலன்கள் நிலரவம், மருத்துவ காப்பீடு விவரம் என அனைத்து விவரங்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையும், செப்டம்பர் மாதம் ஊதியமும் மற்றும் போனஸ் ஆகியவை ஒரே தொகையாக அரசு ஊழியர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி
இதனால் வருமான வரி கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதால் ஊதியத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. அதற்கு பிறகு அக்டோபர் மாதம் சம்பளத்திலும் வருமான வரி தொகையையே பிடித்தம் செய்ததால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர்கள்
இதனால், வருமான வரித்துறையில் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப பெறுவதில் 6 மாதம் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதற்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக டிசம்பர் மாதத்திற்கான சம்பள பட்டியல் தயாரிக்கும் அனைத்து துறை அலுவலரும் இணையதளத்தில் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்த பின் சம்பளத்திற்குரிய வருமான வரியை மட்டுமே பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.