- Home
- Tamil Nadu News
- வரிசை கட்டி வரும் மேகக்கூட்டங்கள்! இன்னொரு ரவுண்ட் இருக்கு! மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!
வரிசை கட்டி வரும் மேகக்கூட்டங்கள்! இன்னொரு ரவுண்ட் இருக்கு! மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்!
Tamilnadu Weatherman: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், இராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் தொடர்ந்து மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதும் இரவு நேரத்தில் மழை பெய்வதுமா இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் கடந்த 4 நாட்களாகவே கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. நேற்று பெய்த கனமழையால் தலைநகர் சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
கனமழை பெய்ய வாய்ப்பு
இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை அப்டேட்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. காலை முதலே வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் மேகக் கூட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. கடல் காற்றும் நிலப்பகுதியை நோக்கி வீசி வருகிறது. இதனால் சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்யும். இரவு நேரத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் கடந்த இரு தினங்களாக இடியுடன் கூடிய மழை பரவலாக பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் மழை
ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய உள்மாவட்டங்களிலும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களிலும் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்கள் இன்னொரு ரவுண்ட் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் மழை
அதேபோல் மற்றொரு பதிவில் தெற்கு புறநகர் பகுதிகள், OMR, மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர், ECR ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ஏற்கனவே நூற்றாண்டுகள் மழை பெய்துள்ளது. மீண்டும் ஒருமுறை தமிழக மழைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறது என தெரிவித்துள்ளார்.