- Home
- Tamil Nadu News
- தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன மாதிரியே நடக்கப்போகுது! 20 மாவட்டங்களில் விடாமல் அடிக்கப்போகுதாம் மழை- எந்தெந்த இடங்கள்.?
தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன மாதிரியே நடக்கப்போகுது! 20 மாவட்டங்களில் விடாமல் அடிக்கப்போகுதாம் மழை- எந்தெந்த இடங்கள்.?
Tamilnadu Weatherman: தமிழகத்தில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மழையும் பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையில் மழை
தமிழகத்தில் பகல் நேரங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். இந்நிலையில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்தாலும் இரவு மற்றும் அதிகாலை வேளையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்கிறது.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
இதனிடையே அடுத்த 5 முதல் 6 நாட்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களில் டமால் டூமிலுடன் இரவில் மழை பெய்யும். காலையில் குளிர்ந்த சூழல் நிலவும். மாலை நேரத்தில் வெயில் அடிக்கும். ரிப்பீட்டாக இது நடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தார்.
20 மாவட்டங்களில் கனமழை
இந்நிலையில் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
லேசானது முதல் மிதமான மழை
அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணித்துள்ளது.