தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு வேட்டு; காத்திருக்கும் ரெட் கார்டு.! கட்டுப்பாடுகள் என்னென்ன?
தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் நன்மை பயக்கும் அதே வேளையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாவதால் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் தமிழக அரசு விழிப்புணர்வு பிரச்சாரம், இணைய வழி விளையாட்டு ஆணையம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கும் தடை விதிக்க ஆலோசித்து வருகிறது.
online games
தொழில்நுட்ப வளர்ச்சி
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கைக்குள் உலகத்தை அடைக்க முடிகிறது. அந்த அளவிற்கு உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து உலகத்தில் எந்த பகுதியில் உள்ள பொருட்களையும் வாங்க முடியும், உலகத்தில் ஏதோ ஒரு இடத்தை பார்க்க விரும்பினால் ஒரு கிளிக் மூலம் நேரடியாக சென்றது போல் உணரவும் முடியும், அது மட்டுமில்லாமல் தெரியாத ஒரு இடத்தின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவு செய்தால் அந்த இடத்தின் பெயர், அதன் சிறப்புகளையும் ஒரே நிமிடத்தில் பெற முடியும். அந்த வகையில் மனிதர்களும் தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப மாறி வருகிறார்கள். முன்பெல்லாம் மின் கட்டணம் முதல் ரயில் டிக்கெட் புக்கிங் வரை நீண்ட வரிசையில் நின்று புக்கிங் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போதோ மொபைல் போனில் இருந்து புக்கிங் செய்ய முடிகிறது.
ஆன்லைன் மோசடி
இது போன்ற பல நல்ல விஷயங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் பயனடைந்து வரும் நிலையில் கெட்ட செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒருவரது வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் எளிதாக பணத்தை கொள்ளையடிக்க முடியும். பெண்களின் புகைப்படத்தை தற்போதுள்ள டெக்னாலஜி மூலம் ஆபாசமாக வெளியிடவும் முடியும். ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தை திருடவும் முடியும். இது போன்ற செயல்களால் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாக்கியும் விட்டது. பள்ளி மாணவர்கள் கையில் தற்போது எளிதாக மொபைல் போன் கிடைப்பதால் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர். இணையதளத்தில் ஆயிரக்கணக்கான ஆன்லைன் கேம்கள் குவிந்து கிடக்கிறது.
வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் மாணவர்கள்
இதனால் பள்ளி மாணவர்கள ரோப்லக்ஸ், ப்ரி பயர், கார், பைக் விளையாட்டு முதல் லூடோ வரை விளையாடி வருகின்றனர். சென்னையில் இருக்கும் ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் நபரோடு கூட்டணி அமைத்தும் விளையாடும் விளையாட்டுக்களும் தற்போது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இந்த விளையாட்டின் மூலம் பள்ளி மாணவர்களின் மனநிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. படிப்பில் கவன குறைவும் பெரிதும குறைந்து விடுகிறது. கண் பார்வை குறைபாடு, மூளையில் ஏற்படும் மாற்றங்களும் மாணவர்களை சுய நினைவை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
இயற்கைக்கு மாறாக மாணவர்களை நிழல் உலகில் வாழ்வது போன்ற சூழலை உருவாக்குகிறது. ஆரம்பத்திலையே கண்டுகொள்ளாத பெற்றோர் மாணவர்களின் புதுவித செயல்பாட்டால் போனை பறிப்பதால் இன்றைய கால சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளவும் நிகழ்வும் அதிகரித்துள்ளது. இது ஒரு பக்கம் என்றால் பெரியவர்களும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டனர்.
ஆன்லைன் சூதாட்டம்
தமிழகத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் தமிழக அரசும் பல சட்ட விதிகளை கொண்டு தடுக்க முற்பட்டனர். ஆனால் நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பாதிப்படைய கூடாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் ஆன்லைன் விளையாட்டுகளை வரைமுறைப்படுத்தும் இணைய வழி விளையாட்டு ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
அதிகரிக்கும் ஆன்லைன் கேம்கள்
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெறும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது இணையவழி விளையாட்டுகளை இந்தியாவில் 2018ம் ஆண்டு 600 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் 1100 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இரண்டு மடங்கு பதிவிறக்கம் அதிகமாகி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதே போல இணைய வழி விளையாட்டுகளை விளையாடுபவர்களில் எண்ணிக்கை இந்தியாவில் 42 கோடியாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 30% ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் கூறுகையில், தமிழ்நாட்டில் 67% ஆசிரியர்களின் தகவல் படி ஆன்லைன் விளையாட்டுகளால் பள்ளி மாணவர்களுக்கு கண் பிரச்சனை ஏற்படுதாக தகவல் வெளியாகி இருப்பதாக தெரிவித்தார்.
இரவு நேரங்களில் விளையாட்டு
தமிழ்நாடு அரசு தான் முதல்முறையாக இந்த இணையவழி விளையாட்டுகளை கட்டுப்படுத்தற்கான ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. ஆணையம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெரிவித்தார். தற்போது தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையமும் இது தொடர்பான ஆய்வு செய்தபோது அதன் பாதிப்பின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் தலைவர் நஜிமுதீன் கூறுகையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் அவர்களுடன் மிக அன்பாக பேசி இதன் பாதிப்புகளை புரிய வைக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் இது போன்ற இணையவழி விளையாட்டுகளை இரவு நேரங்களில் மாணவர்கள் விளையாடுகின்றனர் என தெரிவித்தார்.
online rummy
தடையை விட விழிப்புணர்வே முக்கியம்
இறுதியாக தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம் கூறுகையில், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் இணையவழி விளையாட்டுகள் மோகம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்தது. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மாணவர்களின் வளர்ச்சியை இணைய வழி விளையாட்டுகள் பாதிக்கிறது. இணையவழி விளையாட்டுகளை ஜப்பான் சீனா போன்ற நாடுகள் தடை செய்துள்ளது. மாணவர்களை கண்காணிப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிக முக்கியமான கடமை. இன்றைய இன்டர்நெட் உலகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களையும், விளையாட்டுகளையும் கட்டுப்படுத்துவதை விட விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய தேவையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது பற்றி தமிழக அரசு ஆலோசனையை தொடங்கியுள்ளது. இரவு பகல் பாராமல் ஆன்லைன விளையாட்டுக்கள் விளையாடுவதால் இரவு தூக்கமின்மையால் மாணவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
online rummy ban
இரவு நேரத்தில் தடை விதிக்க திட்டம்
ஆன்லைன் விளையாட்டுகளுக்காக டெபாசிட் செலுத்தும் தொகைக்கும் உச்ச வரம்பு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட அனுமதிக்கலாமா என்பது தொடர்பாக சட்டங்களை வகுக்கவும் திட்டமிட்டு வருகிறது.
இது மட்டுமில்லாமல் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் மட்டுமே ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடுவது வகையில் கட்டாயமாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் விளையாட்டுக்களை பொறுத்தவரை சிறுவர்கள் ஆர்வமாக விளையாடும் விளையாட்டில் இருந்து பெரியவர்கள் பணம் கட்டி விளையாடும் விளையாட்டுக்களுக்கு இரவு நேரத்தில் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.