- Home
- Tamil Nadu News
- இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 50 ஆயிரம் ரூபாய்.! பணத்தை பெற தமிழக அரசு அழைப்பு
இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 50 ஆயிரம் ரூபாய்.! பணத்தை பெற தமிழக அரசு அழைப்பு
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்து முதிர்வுத்தொகை பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

பெண்களுக்கான கல்வி
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகா�ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்தவும், பாலினப் பாகுபாட்டைத் தடுக்கவும், கல்வி மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாட்டை பின்பற்ற ஊக்குவித்தலுக்காகவும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு பெண் குழந்தைகள் திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000/- நிலையான வைப்புத்தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும். 18 வயது நிறைவடையும் போது, வைப்புத்தொகை மற்றும் வட்டியுடன் முதிர்வுத் தொகை (சுமார் ரூ.1,50,000/- வரை) பெண் குழந்தைக்கு வழங்கப்படும், முக்கியமாக அந்த பெண் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இடம்பெற பல்வேறு தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெற தேவையான தகுதிகள்
குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்; ஆண் குழந்தை இருக்கக் கூடாது.
பெற்றோரில் ஒருவர் (பொதுவாக தாய்) 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு மேல் இருக்கக் கூடாது.
இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பெண் குழந்தைகள் 01.08.2011 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்.
குடும்ப அட்டை, ஆதார் அட்டை.
வருமானச் சான்று (ரூ.1,20,000/-க்குள்).
கருத்தடை அறுவை சிகிச்சை சான்று.
ஆண் குழந்தை இல்லை என்பதற்கு வட்டாட்சியர் உறுதிச் சான்று.
இருப்பிடச் சான்று (10 ஆண்டு தமிழ்நாடு வசிப்பு).
குடும்பப் புகைப்படம்.
விண்ணப்ப முறை:
விண்ணப்பப் படிவத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO), ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் பெறலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
2 பெண் குழந்தைகள் திட்டத்தில் முதிர்வு தொகை
இந்த நிலையில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,
சென்னை மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிட விரிவாக்க அலுவலர் (ம) நகர் நல அலுவலர்கள் மூலம் பயனாளிகளை கண்டறிந்து ஆவணங்களை பெற்று ஆணையரகம் மூலம் தொகை பெற்று வழங்கப்பட்டு வருகிறது. கண்டறிய இயலாத பயனாளிகள் விவரம் சென்னை மாவட்ட வலைத்தளத்தில் (http://chennai.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதிர்வு தொகை பெறுவது எப்படி.?
மேலும் வைப்புத்தொகை பத்திரம் பெற்று 22 வயது மற்றும் அதற்கு மேல் பூர்த்தி அடைந்தும் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் தங்களின் வைப்புத்தொகை பத்திரம். வங்கி கணக்கு விவரம் (தனி கணக்கு). 10 ம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்திலுள்ள விரிவாக்க அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர்களிடம் விண்ணப்பம் அளிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சித் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக் கொண்டுள்ளார்.