- Home
- Tamil Nadu News
- 24 மணி நேரமும் கடையை திறந்து வைக்கலாம்.! வணிகர்களுக்கு அசத்தலான அறிவிப்பு - அரசாணை வெளியீடு
24 மணி நேரமும் கடையை திறந்து வைக்கலாம்.! வணிகர்களுக்கு அசத்தலான அறிவிப்பு - அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த உத்தரவு, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழிற்வளர்ச்சி
நவீன காலத்திற்கு ஏற்ப தொழிற் வளர்ச்சியும் மாறி வருகிறது. அந்த வகையில் நாட்டில் உள்ள உணவகங்கள், கடைகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இதை தேவைக்கு ஏற்ப மாநிலங்கள் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு, காலநிலை சூழல், நடைமுறை தேவைகள் அடிப்படையில் மாற்றியும் அமல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
24 மணி நேரமும் செயல்படும் வணிக நிறுவணங்கள்
இதன் மூலம் தொழிற் வளர்ச்சி அடையும் எனவும், வியாபாரம், பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் என கூறப்பட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை, 2017-ம் ஆண்டு முதல் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவானது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே செயல்படுத்தும் வகையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு கடைகள் வணிக நிறுவனங்கள் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி
இது தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் 05.05.2025 அன்று 42வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில்,
"பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்" என அறிவித்தார்.
24 மணி நேரமும் திறக்க 3 ஆண்டுகளுக்கு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்.வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, 05.06.2025 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், அரசாணை (டி) எண்.207. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (கே2)துறை நாள் மூலம் 08.05.2025 ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.