தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிகர்களுக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வணிகர் நல வாரியத்தில் இலவச உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு, உதவித்தொகை உயர்வு, எளிதான தொழில் உரிமம் வழங்கல் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இதில் அடங்கும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநாடு மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிகர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கியமாக, வணிகர் நல வாரியத்தில் கட்டணமில்லாமல் உறுப்பினராக சேர்வதற்கான கால அவகாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உதவித்தொகை உயர்வு:

மேலும், வணிகர் நல வாரியத்தில் ஏற்கனவே நிரந்தர உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை தற்போதுள்ள ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

உணவுப் பொருட்கள் விற்பனை செய்யாத மற்றும் 500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு கொண்ட வணிக நிறுவனங்களுக்கு இனிமேல் சுய சான்றிதழ் அடிப்படையிலேயே தொழில் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் சிறு வணிகர்கள் எளிதாக தொழில் தொடங்க முடியும்.

தமிழில் கடைகளுக்கு பெயர் சூட்டனும்- முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை மாநகராட்சி தவிர்த்து பிற மாநகராட்சிகளில் வணிகர்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ஏற்கனவே அமைக்கப்பட்ட வழிகாட்டுக்குழுவைப் போன்றே, சென்னையிலும் பிற நகராட்சிகளிலும் இத்தகைய குழுக்கள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார். மேலும் கடைகளில் உள்ள ஆங்கில பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். 

மே 5 - வணிகர் நாள்:

வர்த்தகர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மே மாதம் 5-ம் தேதியை வணிகர் நாளாக அறிவிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கான புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்படும் என்றும், இதன் மூலம் வணிகர்கள் 22 வகையான சேவைகளை எளிதாகப் பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் வணிக நிறுவனங்களை திறக்க ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பும் வணிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புகள் வணிகர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.