தீபாவளி பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டும் அனுமதி.. தமிழக அரசு உத்தரவு!
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பட்டாசு - தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளித் திருநாளன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளித் திருநாள் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நாளாகும். இருப்பினும், பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று ஆகியவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடியால் ஏற்படும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு தடை வழக்கு
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்தது.
இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதற்கு நேரத்தை நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.
2 மணிநேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம்
அதன்படி, இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டுகளைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களும், பட்டாசு வணிகர்களும் சுற்றுச்சூழல் விதிகளையும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி, குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடித்துப் பாதுகாப்பாகத் தீபாவளியைக் கொண்டாட வேண்டும்"
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.