- Home
- Tamil Nadu News
- e-Sevai Training : சொந்த ஊரில் இ-சேவை மையம் தொடங்கணுமா? தமிழக அரசின் 3 நாள் சிறப்பு பயிற்சி..முழு விவரம் இதோ!
e-Sevai Training : சொந்த ஊரில் இ-சேவை மையம் தொடங்கணுமா? தமிழக அரசின் 3 நாள் சிறப்பு பயிற்சி..முழு விவரம் இதோ!
e-Seva Maiyam: சொந்தமாக இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? செப்டம்பர் 28, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு இ-சேவை தொடர்பான பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி நேரம், கட்டணம், இடம், பதிவு மற்றும் இ-சேவை மையம் தொடங்குவது குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

இ-சேவை மையம்
சொந்த ஊரிலேயே சுயமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? இ-சேவை மையம் தொடங்கலாம் என நினைக்கிறீர்களா? ஆனால் எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சேவைகள் வழங்குவது, சான்றிதழ்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியவில்லையா?
இதற்காகவே தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில் இ-சேவை தொடர்பான சிறப்புப் பயிற்சி 3 நாள் நடைபெற உள்ளது. இதில் அரசு சான்றிதழ், நடைமுறைப் பயிற்சி, அரசு இணையதளங்களை பயன்படுத்தும் முறை என இ-சேவை தொழிலைத் தொடங்க விரும்புவோருக்கு தேவையான பல விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
என்ன பயிற்சி?
தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute - EDII-TN) சார்பில், இ-சேவை மையம் தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்கான 3 நாள் நேரடிப் பயிற்சி நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ EDII-TN அறிவிப்பில், வருகிற செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் சென்னையில் பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சி எப்போது, எங்கு?
பயிற்சி செப்டம்பர் 28 முதல் 30 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII-TN வளாகத்தில் நடைபெறுகிறது. பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்கான பதிவுக் கட்டணம் ரூ.5,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இருக்கைகள் குறைவாக இருப்பதால் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி எதற்காக?
இந்தப் பயிற்சியில் இ-சேவை மையம் தொடங்குவது எப்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் என்ன, பொதுமக்களுக்கு இணையம் வாயிலாக வழங்கப்படும் சேவைகளை எவ்வாறு கையாள்வது போன்றவை குறித்து கற்றுத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் பல்வேறு அரசு சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும். தற்போது இ-சேவை இணையதளத்தில் சான்றிதழ்கள், உரிமங்கள் உள்ளிட்ட 119 அரசு சேவைகள் இடம்பெற்றுள்ளன.
3 நாட்கள் பயிற்சி
வருவாய்த்துறை சார்பில்,
- சாதிச் சான்றிதழ் (Community Certificate)
- பிறப்பிடச் சான்றிதழ் (Nativity Certificate)
- வருமானச் சான்றிதழ் (Income Certificate)
- முதல் பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate)
- வாரிசுச் சான்றிதழ் (Legal Heir Certificate)
- OBC சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ் (Residence Certificate)
- கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்
- விதவைச் சான்றிதழ்
- கலப்புத் திருமணச் சான்றிதழ்
- ஆண் குழந்தை இல்லா சான்றிதழ்
- திருமணமாகாத சான்றிதழ்
- சிறு விவசாயி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
அரசு நலத்திட்டங்கள்
- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை
- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
- திருமண உதவித்தொகை
- இலவச தையல் இயந்திரம்
- பயிர் காப்பீடு போன்ற அரசு நலத்திட்டங்கள் தொடர்பான இணையவழிச் செயல்முறைகளும் இதில் இடம்பெறுகின்றன.
இ-சேவை மையத்தில் என்னென்ன சேவைகள்?
- PSTM சான்றிதழ்
- இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS)
- பாஸ்போர்ட் விண்ணப்பம்
- வேலைவாய்ப்புப் பதிவு
- PAN தொடர்பான சேவைகள்
- ஆதார் முகவரி மாற்றம்
- Udyam (MSME) பதிவு
- FSSAI உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு
- மின் இணைப்புக்கான கட்டண விண்ணப்பம்
- குடும்ப அட்டை தொடர்பான விண்ணப்பம் உள்ளிட்ட பல சேவைகள் குறித்தும் கற்றுத்தரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் ஒவ்வொரு அரசு அலுவலகத்திற்கும் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய சிரமம் குறைந்து, ஒரே இ-சேவை மையத்தின் மூலம் பல்வேறு அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்கும் வசதி பொதுமக்களுக்கு கிடைக்கிறது.
பதிவு செய்வது எப்படி?
பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் EDII-TN இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். பதிவு மற்றும் தங்குமிடம் தொடர்பான விவரங்களுக்கு 9360221280, 8668100181 ஆகிய எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயிற்சி முடித்த உடனே இ-சேவை மையம் தொடங்கலாமா?
3 நாள் பயிற்சியில் கலந்துகொண்டால் போதும், உடனே சொந்தமாக இ-சேவை மையம் தொடங்கிவிடலாம் என்று நினைக்கிறீர்களா? அங்கேதான் ஒரு முக்கிய விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டதற்காக மட்டும் அதிகாரப்பூர்வ e-Sevai Centre Login ID வழங்கப்படாது. மாறாக, இசேவை மையம் தொடங்க என்ன செய்ய வேண்டும், Login ID பெறுவதற்கான நடைமுறைகள் என்ன, எங்கு விண்ணப்பிக்க வேண்டும், என்னென்ன வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் போன்ற தேவையான தகவல்கள் பயிற்சியில் வழங்கப்படும் என்று EDII-TN தெரிவித்துள்ளது.
எனவே, பயிற்சி முடித்தால் அடுத்த நாளே இ-சேவை மையம் தொடங்கலாம் என்று நினைக்க வேண்டாம். பயிற்சிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட விதிமுறைகளின்படி விண்ணப்பித்து, தேவையான அங்கீகாரம் மற்றும் Login ID பெற்ற பிறகே அதிகாரப்பூர்வமாக இ-சேவை மையத்தை நடத்த முடியும்.

