- Home
- Tamil Nadu News
- VS Babu Net Worth : 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் வி.எஸ்.பாபுவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
VS Babu Net Worth : 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் வி.எஸ்.பாபுவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் உள்ளதா?
Kolathur MLA VS Babu Net Worth : கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

வி.எஸ்.பாபு மரணம்
நீண்ட காலமாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ வி.எஸ்.பாபு சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செப்டம்பர் 9ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து கடந்த 70 நாட்களுக்கு மேலாக அவரது உடல்நிலை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் நவம்பர் 19ந் தேதி மதியம் 2:24 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
எம்எல்ஏவின் மறைவை மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் உறுதிப்படுத்தினார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு விரிவான சிகிச்சை அளித்த போதிலும் பாபுவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததாக அவர் தெரிவித்தார். எம்எல்ஏ பாபுவின் மறைவுக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
வி.எஸ்.பாபு மறைவு.. கொளத்தூரில் அடுத்த அரசியல் அதிரடி..? மீண்டும் களமிறங்கும் ஸ்டாலின்..?
கொளத்தூரில் ஸ்டாலினை தோற்கடித்தார்
2026ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தோற்கடித்ததன் மூலம் வி.எஸ்.பாபு அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றார். 2011ஆம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த கொளத்தூர் தொகுதியை அவரிடமிருந்து கைப்பற்றினார் விஎஸ் பாபு. இந்தத் தேர்தலில் பாபு 82,997 வாக்குகளும், ஸ்டாலின் 74,202 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் பாபு வெற்றி பெற்றார்.
2006-ல் திமுகவில் போட்டியிட்டு வெற்றி
கொளத்தூர் தொகுதி ஸ்டாலினின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட நிலையில், இந்தத் தேர்தல் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்தலுக்கு முன்பு பாபுவுக்கு திமுகவுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் அந்தக் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக 2006ஆம் ஆண்டு புரசைவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வி.எஸ்.பாபு சொத்து மதிப்பு
வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு பின் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரமும் கவனம் பெற்றுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தாக்கல் செய்த அபிடவிட்டில் தன்னிடம் 3.7 கோடி சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதில் 3.3 கோடி அசையா சொத்துக்கள் என்றும், 37.1 லட்சம் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். கல்வித் தகுதியை பொறுத்தவரை அவர் தான் 8ம் வகுப்பு வரை தான் படித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.














