- Home
- இந்தியா
- LPG e-KYC Deadline: எல்பிஜி இ-கேஒய்சி செய்ய இன்னும் 2 நாட்கள் மட்டுமே! ஆகஸ்ட் 31 கடைசி நாள்
LPG e-KYC Deadline: எல்பிஜி இ-கேஒய்சி செய்ய இன்னும் 2 நாட்கள் மட்டுமே! ஆகஸ்ட் 31 கடைசி நாள்
எல்பிஜி இணைப்பு வைத்திருக்கும் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை LPG e-KYC செய்யாதவர்கள் ஆகஸ்ட் 31-க்குள் இந்த நடைமுறையை முடிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நினைவூட்டல் தகவல்களை அனுப்பி வருகின்றன.

LPG e-KYC
நாடு முழுவதும் சுமார் 33 கோடி எல்பிஜி நுகர்வோர் உள்ளனர். எல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது e-KYC விவரங்களைப் புதுப்பிப்பது அவசியம். இருப்பினும், இன்னும் ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த முக்கியமான நடைமுறையை முடிக்காமல் உள்ளனர்.
உங்களுடைய LPG e-KYC இன்னும் நிலுவையில் உள்ளதா என்பதை உடனடியாக சரிபார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில், LPG e-KYC செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது இந்த பணியை முடிக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.
முன்னதாக, LPG e-KYC செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 16 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஆகஸ்ட் 23 வரை நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலும் 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 31-க்குள் e-KYC செய்யாவிட்டால் என்ன ஆகும்?
LPG e-KYC செய்யாதவர்களுக்கு சில முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஆகஸ்ட் 31-க்குள் e-KYC செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்படுமா? அல்லது சந்தை விலையில் சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுமா? என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது.
இதுகுறித்து எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், நுகர்வோர் தங்களது e-KYC-ஐ விரைவாக முடித்துக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. எனினும், e-KYC செய்யாவிட்டால் கேஸ் புக்கிங் முற்றிலும் நிறுத்தப்படும் அல்லது மானிய சலுகை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெளிவாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், LPG சேவையை எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து பெற e-KYC-ஐ முடிக்க வேண்டும் என வலியுறுத்தியது. அதேபோல், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) வெளியிட்ட பதிவிலும் e-KYC செய்யாவிட்டால் கேஸ் புக்கிங் நிறுத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை.
வீட்டிலிருந்தபடியே LPG e-KYC செய்வது எப்படி?
LPG e-KYC-ஐ உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாக வீட்டிலிருந்தபடியே செய்யலாம். அதற்காக, நீங்கள் பயன்படுத்தும் கேஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
• Indane வாடிக்கையாளர்கள் – IndianOil ONE செயலி
• HP Gas வாடிக்கையாளர்கள் – HP Pay செயலி
• Bharat Gas வாடிக்கையாளர்கள் – Bharat Gas செயலி
மேலும், முக அங்கீகாரம் (Face Authentication) செய்வதற்காக Aadhaar FaceRD செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் செயலியில் லாகின் செய்து e-KYC என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், முக அங்கீகாரம் மூலம் உங்கள் LPG e-KYC செயல்முறையை முடிக்கலாம்.
ஆன்லைனில் செய்ய முடியவில்லையா? கவலை வேண்டாம்!
ஆன்லைன் முறையில் e-KYC செய்ய வசதியில்லாதவர்கள் அருகிலுள்ள கேஸ் விநியோக முகவரை (Gas Distributor Agency) நேரில் அணுகலாம். ஆதார் அட்டை மற்றும் கேஸ் பாஸ்புக் உள்ளிட்ட தேவையான விவரங்களுடன் சென்று, பயோமெட்ரிக் கைரேகை சரிபார்ப்பு மூலம் e-KYC செய்து கொள்ளலாம்.
மேலும், கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் வீட்டிற்கு வரும்போதும், அவரிடம் உள்ள அதிகாரப்பூர்வ POS இயந்திரம் மூலம் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்து e-KYC-ஐ முடிக்க முடியும்.
முக்கியமாக, ஏற்கனவே LPG e-KYC செய்துள்ள நுகர்வோர் மீண்டும் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்னும் e-KYC செய்யாதவர்கள் மட்டும் காலக்கெடுவுக்குள் இந்த நடைமுறையை முடித்துக்கொள்வது நல்லது.

