- Home
- Tamil Nadu News
- 100 கி.மீட்டர் வேகம்... பயங்கர சத்தத்துடன் வெடித்த முதல்வர் ஸ்டாலினின் கார் டயர்.. பதறிய பாதுகாவலர்கள்!
100 கி.மீட்டர் வேகம்... பயங்கர சத்தத்துடன் வெடித்த முதல்வர் ஸ்டாலினின் கார் டயர்.. பதறிய பாதுகாவலர்கள்!
மதுரை அருகே முதல்வர் ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. என்ன நடந்தது? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7.1.2026) திண்டுக்கல் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் தனது காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கார் டயர் வெடித்து விபத்து
முதல்வர் காரின் முன்புறமும், பின்பிறமும் பாதுகாப்பு படை வீரர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். ஆஸ்டின்பட்டி அருகே சுமார் 100 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அதன் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தினார். மற்ற வாகனங்களில் வந்த பாதுகாவலர்களும் உடனே ஓடி வந்தனர்.
மாற்று காரில் ஏறி சென்ற முதல்வர்
ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தியதால் நல்ல வேளையாக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வேறு ஒரு காரில் ஏறி மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முதல்வர் சென்ற காரின் டயரின் வெடித்து நடுரோட்டில் நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓட்டுநர் சரியாக கவனிக்கவில்லையா?
முதல்வர் அந்த காரில் ஏறுவதற்கு முன்பே கார் நல்ல நிலையில் உள்ளதா? டயர்கள் சரியாக உள்ளதா? வேறு ஏதும் பிரச்சனைகள் உள்ளதா? என்பது குறித்து பாதுகாவலர்கள் ஆய்வு செய்திருப்பார்கள்.ஆனாலும் முதல்வரின் கார் டயர் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் கார் டயரின் நிலையை பாதுகாவலர்கள், அதன் ஓட்டுநர் முன்பே சரியாக கவனிக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்ந்துள்ளது. வெடித்த காரின் டயரை ஓட்டுநர், பாதுகாவலர்கள் உடனடியாக மாற்றினார்கள்.

