- Home
- Tamil Nadu News
- ஈரோட்டில் காலியான அதிமுக கூடாரம்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை தூக்கி எறிந்த 3000 நிர்வாகிகள்
ஈரோட்டில் காலியான அதிமுக கூடாரம்..! செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை தூக்கி எறிந்த 3000 நிர்வாகிகள்
அதிமுக கட்சி பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சுமார் 3000 நிர்வாகிகள் தங்கள் கட்சிப் பதவியை துறந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

செங்கோட்டையனின் பதவி பறிப்பு
அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த காரணத்திற்காக அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனின் அனைத்து கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டன. மேலும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட வேறு சில நிர்வாகிகளின் பதவியும் பறிக்கப்பட்டது.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூண்டோடு ராஜினாமா
இதனிடையே கோபிசெட்டிபாளையம் உட்பட ஈரோட்டின் பல பகுதிகளில் உள்ள ஒன்றிய, நகர, கிளை, பேரூர், கழக, வார்டு செயலாளர்கள் என சுமார் 3000 நிர்வாகிகள் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சிப் பதவியை ராஜினாமா செய்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
அதிமுக ஒன்றுபட நிர்வாகிகள் கோரிக்கை
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது, அதிமுக பழைய வலிமையை பெறவேண்டும், வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும், எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் மக்களுக்கு உதவி செய்யும் ஒரு ஆட்சி அமைய வேண்டும். இந்த நல்ல எண்ணம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதற்கு பொதுச் செயலாளர் அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எங்களது கட்சி பதவியில் இருந்து விலகுகின்றோம். கட்சி ஒன்று பட்டால் பதவியில் நீடிப்போம் என்று அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.