- Home
- Tamil Nadu News
- கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து, 13 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. இதனிடையே, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று மட்டும் 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அரியலூர் 104, வேலூர் 103, ஈரோடு 102, மதுரை 101, சென்னை, கரூர், நாமக்கல், தருமபுரி, பாளையங்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்கு வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இதனிடையே நேற்று பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் மே 1ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
